EBM News Tamil
Leading News Portal in Tamil

விஜய்சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ நவம்பர் 14-ல் ரிலீஸ்! | Anl Arasu directorial Phoenix veezhan movie gets release date


சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ திரைப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படமும் வெளியாக உள்ளது.

முன்னதாக இந்தப் படம் குறித்து சூர்யா விஜய்சேதுபதி கூறுகையில், “ஒருநாள் அப்பா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவருக்கு சாப்பாடு கொடுக்க போனேன். அப்போது அனல் அரசு மாஸ்டர் கண்ணில் பட்டுவிட்டேன். அதன்பிறகு இந்தப் படம் அமைந்தது. எனக்கு சண்டைக் காட்சிகள் கொண்ட ஒரு நல்லப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அப்பா வேற, நான் வேற. அவருடைய பெயரை நான் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தக் கூடாது என நினைக்கிறேன். அதனால்தான், படத்தில் கூட சூர்யா என என் பெயரை மட்டும்தான் பயன்படுத்தச் சொன்னேன். இப்போது காலேஜில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து அப்பாவோடு சேர்ந்து நடிப்பேனா என்றுக் கேட்டால் அதைப் போக போக பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.