“நான் சாதாரணமாக குறை கூறமாட்டேன். ஆனால்…” – விமானம் தாமதமானது குறித்து ஸ்ருதி ஹாசன் ஆதங்கம் | Actor Shruti Haasan slams IndiGo over 4 hour delay in Mumbai, airline responds
சென்னை: மும்பையிலிருந்து புறப்படும் இன்டிகோ விமானம் 4 மணிநேரம் தாமதமானதாகவும், அது குறித்த இன்டிகோ விமான நிறுவனம் எந்த தகவலையும் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் நள்ளிரவு 12.24 மணி அளவில் வெளியிட்டுள்ள பதிவு: “நான் எப்போதும் சாதாரணமாக குறை சொல்பவர் அல்ல. ஆனால், இன்டிகோ நிறுவனத்தினர் இன்று அதிகப்படியான குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர். கடந்த 4 மணிநேரமாக எந்த வித தகவலும் கிடைக்காமல் நாங்கள் விமான நிலையத்தில் தவிக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா?” என பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள இன்டிகோ நிறுவனம், “விமானம் தாமதமானதால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். குறித்த நேரத்தை கடந்து காத்திருப்பது எவ்வளவு சிரமமானது என்பதை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம். மும்பையில் நிலவும் வானிலை காரணமாக விமானங்கள் வருவது தாமதமாக உள்ளது. இந்த காரணிகள் யாவும் எங்களுக்கு கட்டுப்பாட்டை மீறியவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் விமான நிலைய குழு பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள் என உறுதியளிக்கிறோம்” என தெரிவித்துள்ளது.