ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? – மருத்துவமனை விளக்கம் | apollo hospital statement released regarding rajinikanth health condition
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பான மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மூத்த இதயவியல் மருத்துவர் சாய் சதீஷ், ரஜினியின் இதயத்தில் ஸ்டன்ட் பொறுத்தியுள்ளார். திட்டமிட்ட படி அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை ரஜினி ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினி நலமுடன் உள்ளார். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் பதிவு: முன்னதாக, “ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘வேட்டையன்’ அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், நாளை (அக்.2) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிடுகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.