EBM News Tamil
Leading News Portal in Tamil

சசிகுமாரின் ‘நந்தன்’ ட்ரெய்லர் எப்படி? – அழுத்தமான காட்சிகளும், கூர்மையான வசனங்களும்! | sasikumar starrer nandhan movie trailer released


சென்னை: சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: அச்சு அசலான கிராமத்து கதையில், அழுக்குப்படிந்த உடைகள், ஷேவ் செய்யாத தாடி, கறையுடன் கூடிய பற்கள் என வித்தியாசமான தோற்றத்தில் கவனம் பெறுகிறார் சசிகுமார். ஒரு கட்டத்தில் அந்த ஊரின் முக்கிய அரசியல் பிரமுகருக்கும் – சசிகுமாருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் படமாக இருக்கும் என தெரிகிறது. எளிய மனிதர்களையும், அவர்களின் வாழ்வியலையும், அவர்கள் மீது செலுத்தப்படும் அதிகாரம் குறித்து படம் பேசும் என்பதை காட்சிகள் உணர்த்துகின்றன.

நடுவில் வரும் ஜிப்ரானின் இசை கவனிக்க வைக்கிறது. “போட்டியே இல்லேங்கிறது பெருமை இல்லங்க. போட்டி போட்ற ஜனநாயகம் தான் பெருமை”, “ஆள்றதுக்கு தான் அதிகாரம் தேவைன்னு நெனைச்சு ஒதுங்கியிருந்தேன். இங்கே வாழ்றதுக்கே அதிகாரம் தேவை” போன்ற வசனங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. பெண் கதாபாத்திரமும் அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

நந்தன்: ‘அயோத்தி’, ‘கருடன்’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைக் கொடுத்திருக்கும் சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளிவர விருக்கிறது ‘நந்தன்’ திரைப்படம். ‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இரா.சரவணன் எழுதி, இயக்கியிருக்கும் அவருடைய மூன்றாவது படம் இது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.