‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ படத்துக்கு சம்பளம் வாங்காத கார்த்திக் ராஜா | karthik raja worked for free in bujji at anupatti
சென்னை: குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்துஉருவாகி இருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. வரும் 31-ம்தேதி வெளியாகும் இந்தப் படத்தை ராம் கந்தசாமி இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இதில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தைநட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன்,லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை 9 வி ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராம் கந்தசாமி கூறும்போது, “நாயை, பூனையைச் செல்லமாக வளர்ப்பதைப் பற்றித்தான் பெரும்பாலானவர்கள் பேசுவார்கள். ஆனால் ஆட்டுக்குட்டியை செல்லமாக வளர்ப்பது பற்றி என் மனைவி சொன்னார். அதைக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்வையிலான கதையாக மாற்றி இந்தப் படத்தை எடுத்தோம். இதில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன் சிறப்பாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவிடம் தயக்கத்தோடு இசையமைக்கக் கேட்டபோது, பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை கொடுத்துவிட்டு வந்தோம். படம் அவருக்குப்பிடித்திருந்தது. சம்பளம் எப்படி இருக்குமோ என்று யோசித்தபோது, அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது” என்றார்.