‘காதலுக்கு மரியாதை’ முதல் ‘வாலி’ வரை: தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆதிக்கம் | Kadhalukku Mariyadhai to Vaalee ajith vijay movie re released in theatre
சென்னை: தமிழகத்தில் நட்சத்திர பின்புலங்களுடன் படங்கள் வெளியாகாத நிலையில், ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. திரையரங்குகளில் தாங்கள் காணத் தவறிய படங்களை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் இருப்பதை ஹவுஸ்ஃபுல் காட்சிகள் உறுதி செய்கின்றன.
கடந்த 16-ம் தேதி ஜெயம் ரவியின் ‘சைரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து, உச்ச நட்சத்திரங்களின் படங்களோ, பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடோ அடுத்த 2 மாதங்களுக்கு இல்லாத நிலை உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதாலும், தேர்வுகாலம் என்பதாலும் ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறிய பட்ஜெட் படங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 7 சிறு படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றுக்கு குறைந்த காட்சிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற காட்சிகளை ரீ-ரிலீஸ் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்கியுள்ளன.
அந்த வகையில் ரஜினியின் ‘அண்ணாமலை’, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’, விஜய்யின் ‘திருமலை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஷாஜஹான்’ அஜித்தின் ‘வாலி’, ‘பில்லா’, ‘சிட்டிசன்’, விஜய் சேதுபதியின் ‘96’, ஜீவாவின் ‘சிவா மனசுல சக்தி’, நிவின் பாலியின் ‘ப்ரேமம்’, சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து காட்சிகளின் எண்ணிக்கை கூடியும், குறைந்தும் வருகின்றன.