‘வள்ளி மயில்’ கிரைம் திரில்லர் படம்: இயக்குநர் சுசீந்திரன் தகவல் | valli mayil is a crime thriller movie
சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா நடித்துள்ள படம், ‘வள்ளி மயில்’. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா, சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதியுள்ளார். விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். 80-களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகியுள்ள இதன் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இயக்குநர் சுசீந்தீரன் பேசும்போது, “இந்தப் படம் கிரைம் திரில்லராக ஆரம்பித்த படம். வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். சத்யராஜ் முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர். அதே போல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். மிகச் சிக்கலான கதை, அதை எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம்” என்றார்.
விழாவில், நடிகர் சத்யராஜ் பேசும்போது, “நாம் நடிக்கும் படங்களில் நம் கொள்கைகள் பற்றி பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம் அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். சில படங்களில் மட்டும்தான் அந்தக் கொள்கைகளோடு சேர்ந்த கதாபாத்திரம் கிடைக்கும். அந்த வகையில் இந்தப் படம் அமைந்ததில் மகிழ்ச்சி. பெண் கதாபாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி. ஏனென்றால் பெண் கதாபாத்திர பெயரில் தலைப்பு வைத்தால் ஹீரோக்களுக்கு சின்ன ஈகோ வரும். இந்தப் படம் பொலிட்டிக்கல் கிரைம் திரில்லர் கதையை கொண்டது” என்றார்.
தயாரிப்பாளர் பிரவீன், டி.இமான், சண்டை பயிற்சி இயக்குநர் ராஜசேகர், பாடலாசிரியர் விவேகா உட்பட படக்குழுவினர் பேசினர்