EBM News Tamil
Leading News Portal in Tamil

“ஞானவேல்ராஜாவின் பின்னால் சிவகுமார் குடும்பம்” – கரு.பழனியப்பன் குற்றச்சாட்டு | karu palaniyappan about paruthiveeran issue


சென்னை: ‘பருத்திவீரன்’ படத்தையொட்டி இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே நடக்கும் பிரச்சினை குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கரு.பழனியப்பன் கூறியதாவது: “ஞானவேல்ராஜாவை நான் மன்னிப்பு கேட்கவே சொல்லவில்லை. என்னுடைய அறிக்கையில், சிவகுமார் ஞானவேல்ராஜாவை மன்னிப்பு கேட்க செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு சின்னப் பயல் தவறு செய்தால் ஒரு பெரிய மனிதரிடம்தான் சொல்வோம் அல்லவா? அதைத்தான் நான் செய்தேன்.

ஞானவேல்ராஜாவுக்குப் பின்னால் சிவகுமார் குடும்பம் இருக்கிறது என்பதைத்தான் நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன். கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டுக்கு அறம் குறித்தும் ஒழுக்கம் குறித்தும் பாடமெடுத்து வருபவர் சிவகுமார். அவர்தான் முதலில் ஞானவேலை அழைத்து மன்னிப்புக் கேட்க சொல்லியிருக்க வேண்டும். அதைத்தான் நான் என்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டேன். அதன்பிறகே ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் விலகியபிறகு நீங்கள் ஏன் உங்கள் பணத்தைப் போட்டு படத்தை எடுத்தீர்கள் என்று அமீரிடம் கேட்டால் பழக்கத்துக்காக என்கிறார். அமீரின் உதவி இயக்குநராக இருந்த சசிகுமார் படத்துக்காக ரூ.1.5 கோடி கொடுத்திருக்கிறார். நீ ஏன் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாய் எனக் கேட்டால், அவரும் ‘பழக்கத்துக்காக’ என்கிறார். இப்படி பழக்கத்துக்காக வந்து நிற்பவன்தான் மதுரைக்காரன். ஞானவேல் ராஜா மதுரைக்காரர்களுக்கு மரியாதை தெரியாது என்கிறார். மரியாதை என்பது வாயில் வரக்கூடியது அல்ல நடத்தையில் வர வேண்டியது” இவ்வாறு கரு.பழனியப்பன் தெரிவித்தார்.