EBM News Tamil
Leading News Portal in Tamil

வரலாற்றுப் பின்னணியில் ‘காந்தாரா- சாப்டர் 1’? | kantara chapter 1 historic movie


பெங்களூரு: ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்த படம், ‘காந்தாரா’. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வரவேற்பைப் பெற்றது. அடுத்து இதன் முதல் பாகம் உருவாகும் என்று கூறியிருந்தார் ரிஷப் ஷெட்டி.

அதன்படி , முதல்பாகம் ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற பெயரில் உருவாகிறது. இதன் முதல் தோற்ற டீஸர் நேற்றுமுன் தினம் வெளியிடப்பட்டது. படத்தின் பூஜை, உடுப்பி மாவட்டம் கும்பாசியில் உள்ள ஆனேகுட்டே விநாயகர் கோயிலில் நடந்தது.

பின்னர், படம்பற்றி ரிஷப் ஷெட்டி கூறும்போது, “காந்தாரா படத்துக்கு கிடைத்த வரவேற்பு,அதிக பொறுப்பை கொடுத்துள்ளது. முந்தைய படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவினர் இதில் அப்படியே தொடர்வார்கள். நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்ய ஆடிஷன் நடத்தி வருகிறோம். நாடகப் பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்போம். இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஆனால், கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம்” என்றார்.

இந்தப் படம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டில், கடம்ப வம்ச ஆட்சியின் பின்னணியில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பூதகோலா ஆட்டத்தின் ஒரு பகுதியாக வணங்கப்படும் பஞ்சுர்லி தெய்வத்தின் பூர்வீகத்தை இந்தப் படம் பேசும் என்கிறார்கள்.