EBM News Tamil
Leading News Portal in Tamil

”நாங்கள் படத்தை கைவிடவில்லை” – ‘துருவ நட்சத்திரம்’ குறித்து கவுதம் மேனன் உருக்கம் | GVM tweet about Dhruva Natchathiram


சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதையடுத்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கவுதம் மேனன் கூறியுள்ளதாவது: “ஒரு பார்வை. நிறைய கனவு. உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே பேப்பரில் இருந்த ‘துருவ நட்சத்திரம்’ கதையை இன்று திரைப்படமாக கொண்டு வந்துள்ளது. அனைத்தும் எங்களுக்கு எதிராக இருந்தபோதும் கூட, எங்களது கனவும், அர்ப்பணிப்பும்தான் இந்த திரைப்படத்தை விரைவில் உங்களுக்காக திரையரங்குகளில் கொண்டு வர உதவப் போகிறது.

படம் நவ.24 அன்று திரைக்கு வரும் என்று நாங்கள் அறிவித்தபோது, அதனை சாத்தியமாக்க நாங்கள் மலைகளை நகர்த்த முயற்சித்தோம். எங்களால் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போனது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்று சொன்னால் நாங்கள் கூறுவது பொய் ஆகிவிடும். நாங்கள் படத்தை கைவிடவில்லை என்று பார்வையாளர்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த அறிக்கை. எங்களது சக்திக்கு உட்பட்டும், மீறியும், இந்த தடைகளை கடந்து, படத்தை திரைக்குக் கொண்டு அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறோம்.

பார்வையாளராகிய நீங்கள் அனைவரும்தான் எங்களுக்கான ‘சியர்லீடர்ஸ்’. உங்களிடமிருந்து கிடைக்கும் முடிவில்லா அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியாகவும் உறுதுணையாகவும் இருக்கிறது. எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன, எங்களது வலிமைக்கான தூண்களாக இருக்கும் உங்களுக்கு நன்றி தெரிவிக்க இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறோம்.

இந்த இறுதி கட்டத்தை நோக்கி நாங்கள் செல்லும்வேளையில், எங்களது படைப்பை உங்களிடம் பகிரும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் இப்படம் வெளிச்சத்தை காணும். ஜான் மற்றும் பேஸ்மெண்ட் டீமின் சினிமா பயணத்தை உங்களுடன் தொடங்க நாங்கள் காத்திருக்கிறோம்” இவ்வாறு கவுதம் மேனன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை நவ.24 காலை 10.30 மணிக்குள் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணத்தைக் கொடுக்காவிட்டால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, திட்டமிட்டபடி ‘துருவ நட்சத்திரம்’ படம் கடந்த நவ. 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவில்லை.