அனிமல் என்ற தலைப்பு ஏன்? – ரன்பீர் கபூர் விளக்கம் | ranbir kapoor revealed the reason behind animal title
இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமாரின் டி சீரிஸ், முராத் கெடானியின் சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி
வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் இந்தப்படம், டிச.1-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது ரன்பீர் கபூர் கூறியதாவது: தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, தந்தைப்பாசம் பற்றி அதிகம் வந்ததில்லை. இந்தப் படம் அந்தக் குறையை போக்கும்.
ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்துக்குத் தயாராவார்கள். நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல்தான் படம் நன்றாக வரக் காரணம் என நினைக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் சந்தீப் மிகவும் வெளிப்படையாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் அவரும் ஒருவர்.
எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன், தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லைவரையும் செல்வான், அவனைக்கொண்டு செல்லும் அந்தப்புள்ளி எது என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை திறமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுபடி செயல்படும். இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இவ்வாறு ரன்பீர் கபூர் கூறினார். திரைப்பட விநியோகஸ்தர் முகேஷ் மேத்தா, சண்டைப்பயிற்சி யாளர் சுப்ரீம் சுந்தர், புரொடக்ஷன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் உட்பட படக்குழுவினர் உடன் இருந்தனர்.