EBM News Tamil
Leading News Portal in Tamil

‘Sapta Sagaradaache Ello – Side B’ Review: காதலும் காதலின் நிமித்தமும் தாக்கம் தந்ததா? | Sapta Saagaradaache Ello Side B movie review


‘சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ’ (Sapta Sagaradaache Ello – Side A) படம், ‘க்ரைம் த்ரில்லர்’ வகைமையில் காதலின் புதுப் பரிணாமத்தைக் காட்டி, இரண்டாம் பாகத்தை பார்க்க வைக்க பலரையும் தயார் செய்திருந்தது. முதல் பாகம் தமிழில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி கவர்ந்ததால், இரண்டாம் பாகம் திரையரங்குகளில் தமிழிலும் வெளியாகியுள்ளது.

மனுவும் (ரக்‌ஷித் செட்டி) பிரியாவும் (ருக்மணி வசந்த்) காதலர்கள். கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனு பெரிய இடத்தில் கார் ஓட்டுநர். கடலோரம் வீடு வாங்கி வாழ்க்கை வாழ பிரியா விரும்புவதை பூர்த்தி செய்ய, செய்யாத குற்றத்தை ஏற்று சிறைக்குச் செல்கிறார். அப்போது அவர் வேலைபார்த்த உரிமையாளர் இறக்க, அவரது மனைவியும், மகனும் கைவிட, சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்கிறார் மனு. தனது காதலியின் வாழ்க்கை சிறப்பாக அமைய அவரை வெறுப்பது போல் தவிர்க்கத் தொடங்குகிறார். இதனால் பிரியா திருமண பந்தத்துக்குள் நுழைகிறார். சிறையில் 10 ஆண்டுகள் கழிப்பதாக முதல் பாகம் நிறைவடையும்.

இரண்டாவது பாகம் வழக்கமான சினிமா தனத்திலிருந்து வேறு தளத்துக்கு அழைத்துப் போகும். சிறையிலிருந்து வெளியே வரும் மனுவுக்கு தங்க இடத்தையும் வேலையையும் சிறையில் நண்பராகும் (கோபால் கிருஷ்ணா தேஷ்பாண்டே) ஏற்பாடு செய்கிறார். ஆனால், பிரியாவின் ஞாபகத்தில் தவித்து அவரைத் தேட துவங்கிறார் மனு. அப்போது பாலியல் தொழிலாளியான சுரபியின் (சைத்ரா) நட்பு கிடைக்க, அவர் மூலம் பிரியாவின் இடத்தை கண்டறிகிறார். பிரியா தனது கணவன், குழந்தையுடன் வாழ்ந்தாலும் பொருளாதார சூழலால் தவிப்பதை உணர்ந்து மறைமுகமாக உதவத் தொடங்குகிறார்.

பிரியா சந்தோஷமாக இல்லாமல் இருப்பதற்கு அவளது கணவன் காரணமா என கண்டறிய முற்பட்டு, அவரைக் கொல்ல முற்படுகிறான். அது காரணமில்லை என்பதை உணர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ அவர்களுக்குத் தெரியாமலேயே பல முயற்சிகளை எடுக்கிறான் மனு. இதனிடையே, சிறையில் மனுவால் தாக்குதலுக்கு உண்டான ரவுடி (ரமேஷ் இந்திரா) அவரை பழிவாங்க துரத்த, இறுதியில் மனு என்னவாகிறான்? அவன் எடுக்கும் முடிவுகள், அவன் வாழ்வை எங்கு கொண்டு செல்கிறது என்பது படத்தின் திரைக்கதை.

காதலின் முழு வடிவத்தை இரண்டாம் பாகத்தில் இயக்குநர் ஹேமந்த் ராவ் காட்டியிருக்கும் விதம் படத்தை மனதில் பதிய வைக்கிறது. முக்கிய கதாபாத்திரங்கள் துவங்கி சிறு கதாபாத்திரங்கள் மட்டுமில்லாமல் படத்தில் வரும் வீடு, ரிப்பேரான ரயில் பெட்டி எல்லாவற்றையும் ஞாபகத்தில் இருக்க வைப்பது இயக்குநருக்கு கிடைத்த அங்கீகாரம். இரண்டாம் பாகத்தில் காதலுடன் மோதலையும் இணைத்து, அதிலும் காதலின் முகத்தை வேறுவிதமாக காட்டியிருப்பதில் ரக்‌ஷித் செட்டி முழுவதும் பொருந்தியிருக்கிறார். முதல் பாகத்தில் காதலனாக இருந்த அவர், இரண்டாம் பாகத்தில் 10 ஆண்டு சிறைவாசத்தை முகத்திலும் உடலிலும் காட்டியிருக்கிறார். அது முற்றிலும் பொருந்துவதுதான் சிறப்பு. காதலியின் கணவன் கரோனாவால் தொழிலில் தோற்றுப் போய் திரியும்போது அவரை கொல்ல முயலும்போதும், அப்போது அவர் பேசுவதைக் கேட்டு மனம் மாறுவதையும் இயல்பாக வெளிக்காட்டும் காட்சியிலேயே அவரது நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார்.

முதல் பாகத்தில் காதலியாக அதிக வசனம் பேசிய பிரியாவுக்கு (ருக்மணி) இரண்டாம் பாகத்தில் அதிக வசனங்களே இல்லை. முகத்தில்தான் உணர்ச்சிகளை காட்டும் சூழலை அப்படியே பிடித்துள்ளார். அவருக்கும் சேர்த்து பேசிவிடுகிறார் சுரபி (சைத்ரா). “என் மனசை பலரும் சுக்குநூறாக உடைத்து விட்டார்கள். நான் அதையெல்லாம் வைத்துகொண்டு நல்லதைதான் திருப்பித் தந்தேன்” என்று அவர் பேசும் வசனமே படத்தின் அடிநாதம்.

பெங்களூரில் யாரும் காட்டாத பகுதிகளை அப்படியே அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிப்படுத்தியிருக்கிறது அத்வைத குருமூர்த்தியின் லென்ஸ். குறிப்பாக க்ளைமாக்ஸில் வரும் சிங்கிள் ஷாட் ரசனை. அவருடன் சேர்ந்த சரண்ராஜின் பின்னணி இசை வேறு தளத்துக்கு படத்தை எடுத்து சென்று விடுகிறது. பிரியா வீட்டின் எதிரேயுள்ள ரிப்பேரான ரயில் பெட்டி, பெரிய பேனர், ரயில்வே டிராக் என ஒவ்வொரு ஏரியாவும் படத்துக்குள் நம்மை அழைத்துசென்று விடுகிறது.

ப்ரியாவின் நினைவுகளிலேயே செல்லும் முதல் பாதியில் ரசிக்க நிறைய இருக்கின்றன. அலைகடல்கள் கால்களை நனைப்பதைப்போல காதல் நினைவுகளை வந்து வந்து செல்வதும், அதனை புறந்தள்ள முடியாமல் ரக்‌ஷித் ஷெட்டி தவிப்பதுமாக நன்றாகவே இருந்தது. இடைவேளைக்குப் பிறகு காதல் ஜானரிலிருந்து விலகி பழிவாங்கல், ஆக்‌ஷன் என பயணிக்கும்போது அயற்சி. முதல் பாகத்தில் ரக்‌ஷித் ஷெட்டி – ருக்மணி இருவருக்கும் சமமான திரைப்பங்கீடு இருக்கும். இரண்டு பேரின் எமோஷன்களும் கடத்தப்பட்டு, ஒரு க்ரைம் த்ரில்லருக்குள் முழுமையான காதல் படமாக அதனை ரசிக்க வைத்திருப்பார் இயக்குநர்.

ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் ‘தியாகி’யைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறார் ரக்‌ஷித் ஷெட்டி. தன் காதலிக்குத் தெரியாமல் அவர் மகிழ்ச்சியுடன் வாழ மறைவிலிருந்து கஷ்டப்படுகிறார். காதலி ருக்மணி கஷ்டங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மருந்துக்கும் கூட அவர் ரக்‌ஷித் ஷெட்டி நினைப்பதாக காட்சிகள் இல்லை. வசனங்களும் குறைவு. கடந்து போன காதல் குறித்தும், அதன் நினைவுகள் குறித்த ருக்மணியின் எண்ண ஓட்டங்கள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் அவரது தரப்பு பேசப்படவேயில்லை. ஒருவேளை, ‘பொருளாதார நெருக்கடி போன்ற சூழல்களில் சிக்கித் தவிக்கும்போது, அங்கே காதல் அனுபவங்களுக்கு என்ன வேலை?’ என்ற லாஜிக் இருக்கக் கூடும்.

எனினும், அவரின் காதல் உணரப்படாதது அழுத்தத்தை குறைத்துவிடுகிறது. முழுக்க முழுக்க ரக்‌ஷித் ஷெட்டியின் உருக்கமான காதலும், காதலியை மகிழ்வுக்கும் போராட்டமுமாக கடக்கிறது. கஷ்டப்படும் ரக்‌ஷித் ஷெட்டி கையில் நினைத்த உடன் காசு வருவது, குண்டடி பட்டும் நிதானமாக வசனம் பேசிக்கொண்டிருப்பது, அவர் செய்த கொலைக்கு எந்த வழக்கும் பதியாதது என லாஜிக் மீறல்களும் உண்டு.

உருக்கமான காதல் அத்தியாயத்தில் ருக்மணியை மவுனமாக்கி, ரக்‌ஷித் ஷெட்டி தரப்பிலிருந்து மட்டுமே படம் நகர்வது, முழுமையான அனுபவத்தை கொடுக்காததுடன் முதல் பாகம் அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், இந்த ‘சைடு பி’ ஒன்சைடு எமோஷன்களை நிறையவே உள்ளடக்கியிருப்பதால் ஒரு தலைக் காதலர்களுக்கு மருந்தாக அமையலாம்!