சென்னை: பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை விமான நிலையம் வந்த ஸ்ருதிஹாசனை, அடையாளம் தெரியாத ஒருவர் பின் தொடர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி, ‘யார் நீங்கள், எதற்காக என்னைப் பின் தொடர்கிறீர்கள்?’என்று கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஸ்ருதிஹாசனிடம் இதுபற்றி கேட்டபோது, “நான் விமான நிலையத்தில் நடந்து கொண்டிருந்த போது, ஒரு மனிதர் என்னைப் பின் தொடர்ந்தார். அவர் அங்கிருந்த புகைப்படக்காரரின் நண்பராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர் மிகவும் நெருங்கி வந்ததால் அசவுகரியமாக உணர்ந்தேன். நான் எனக்குப் பாதுகாவலர்களை வைத்துக்கொள்வதில்லை. எனக்கு அதில் விருப்பமில்லை. முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மற்ற நடிகைகளைப் போல பாதுகாவலர்களை நியமிக்க ஸ்ருதிஹாசன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.