ரூ.4 கோடியை வைத்துக்கொண்டு படம் தயாரிக்க வராதீர்கள்: நடிகர் விஷால் வேண்டுகோள் | Don’t make a film with Rs 4 crore: Actor Vishal
சென்னை: விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம், `மார்க் ஆண்டனி’ . மினி ஸ்டூடியோ சார்பில் வினோத் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். டைம் டிராவல் கேங்ஸ்டர் படமான இது, வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. விஷால், எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், நிழல்கள் ரவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் விஷால் பேசும்போது கூறியதாவது:
ஆதிக், கதை சொல்லும்போது எனக்கு ஒரு விஷயம்தான் தோன்றியது. உடனடியாக ஷூட்டிங் போகலாம் என்று சொன்னேன். இது என் படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் என்பதால் தயாரிப்பாளர் யார் என்பதைச் சொல்கிறேன் என்றேன். சினிமாவில் முதலில் நெகட்டிவ் விஷயம் தான் வெளியே வரும். ஆதிக்குடன் படம் பண்ணுகிறேன் என்றதும், ‘ஏன், அவர் இயக்கத்தில் நடிக்கிறீங்க?’ என்று பலர் சொன்னார்கள். ‘எனக்கு கதைப் பிடித்திருக்கிறது. ஆதிக் மீது நம்பிக்கை இருக்கிறது’ என்று சொன்னேன். அப்போது வேறு மாதிரி சொன்னவர்கள் இப்போது, ‘நல்ல படம், ஆதிக் நல்லா பண்ணியிருக்கார்’ என்று சொல்கிறார்கள். வியாழக்கிழமை வரை எல்லோரும் அப்படித்தான். வெள்ளிக் கிழமை சாதிப்பதுதான் இங்கு முக்கியம். ஆதிக், சாதித்திருக்கிறார். இதுதான்அவருக்கு முதல் படம் போல. இனிமேல்தான் அவர் பயணம் ஆரம்பிக்கும்.
இந்தப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தது சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். 16 வருடத்துக்குப் பிறகு எனக்கு இந்தப் படம் மூலமாக பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு விஷால் கூறினார்.
பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விஷால், “ஒரு கோடியில் இருந்து ரூ.4 கோடி வரை கையில் வைத்துக்கொண்டு தயவு செய்து சினிமா தயாரிக்க வராதீர்கள். அதில் உங்களுக்குச் சல்லிக்காசு கூட திரும்பக் கிடைக்காது. இதுதான் உண்மை. அந்தப் பணத்தில் நிலத்தை வாங்கிப் போடுங்கள். ஏற்கெனவே 120 திரைப்படங்கள் வெளியிட முடியாமல் காத்துக் கிடக்கின்றன. அதனால் தயவு செய்து இன்னும் 2 வருடங்கள் வந்துவிடாதீர்கள்” என்றார்