EBM News Tamil
Leading News Portal in Tamil

ஷாருக் – கரண் ஜோஹர் படங்கள் இந்திய கலாச்சாரத்தை அழித்துவிட்டன: விவேக் அக்னிஹோத்ரி சாடல் | SRK and Johar has destroyed the cultural fabric of India says Vivek Agnihotri


மும்பை: கரண் ஜோஹர் மற்றும் ஷாருக்கான் படங்கள் இந்தியாவின் கலாச்சார கட்டமைப்பு மிகவும் அழிவுகரமான வகையில் சேதப்படுத்தியுள்ளன என்று இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி விமர்சித்துள்ளார்.

இந்தியில் ‘சாக்லேட்’, ‘ஹேட் ஸ்டோரி’, ’சித்’ உள்ளிட்ட படங்லளை இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் விவாதங்களை கிளப்பியது. தொடர்ந்து விவேக் அக்னிஹோத்ரியின் சர்ச்சையான கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு விவேக் அக்னிஹோத்ரி அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் நீண்டகாலம் ஒரு இடதுசாரியாக வாழ்ந்ததால் எனக்குள் தற்போது மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் நமக்கு குழந்தைகள் இருக்கும்போது, நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்கிறோம். இந்த குழந்தைகள் வளரும்போதும், இங்கிருந்து வெளியே செல்லும்போதும் இந்தியாவிலிருந்து எதை கற்றுக் கொள்வார்கள் என்று யோசித்திருக்கிறேன். இடதுசாரி சித்தாந்தம் காரணம், நாம் நமது நாட்டை வெறுக்க தொடங்குகிறோம். நான் அனைத்தையும் வெறுத்தேன். அந்த வெறுப்பை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தேன். அதுதான் என்னை மாற்றியது.

அனுபவங்களும் வயதும் என்னை மாற்றின. குறிப்பாக நான் இந்தியா முழுக்க பயணம் செய்தபோது நான் உண்மையான இந்தியாவைப் பார்த்தேன். ஒரு இயக்குநராக முதன்முறையாக நான் உண்மையான இந்தியாவை பார்த்தேன். யாரும் சொல்லாத ஏராளமான கதைகளை நான் கேட்டேன். இந்த நாட்டில் இயக்குநர்கள் செய்த மிகப்பெரிய குற்றம் அது.

ஒரு சூப்பர்ஸ்டாராக அமிதாப் பச்சனின் வருகைக்குப் பிறகு சினிமாவில் உண்மையான கதைகள் சொல்லப்படவில்லை. குறிப்பாக கரண் ஜோஹர் மற்றும் ஷாருக்கான் படங்கள் இந்தியாவின் கலாச்சார கட்டமைப்பு மிகவும் அழிவுகரமான வகையில் சேதப்படுத்தியுள்ளன. எனவேதான் உண்மைக் கதைகளை சொல்வது மிகவும் முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்” என்று விவேக் அக்னிஹோத்ரி கூறினார்.