‘தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை’ – ரஜினியின் ‘ஜெயிலர்’ முதல் வாரத்தில் ரூ.375 கோடி வசூல் | Jailer becomes the first movie in tamil cinema to collect 375 cr in first week
சென்னை: ‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் ரூ.375 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் வசூலான அதிக தொகை இதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
இந்தியா முழுவதும் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. கடந்த சுதந்திர தினம் அன்று (ஆக.15) ‘ஜெயிலர்’ படம் நாடு முழுவதும் ரூ.33 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. கேரளாவில் இதுவரை ரூ.30 கோடியும், தமிழகத்தில் ரூ.100 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியனது.
இந்த நிலையில், இப்படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.375 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் வாரத்தில் வசூலான அதிக தொகை என்றும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.