சென்னை: நடிகர் சூர்யா, ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா பதானி, நட்டி , பாபி தியோல் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் உருவாகிறது. இதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 43-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களைச் சந்தித்த சூர்யா, அவர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது மும்பையில் அவர் செட்டிலாகிவிட்டதாகக் கூறப்படுவது பற்றி ரசிகர் ஒருவர் கேட்டார்.
அப்போது அவர் கூறும்போது, தனது மகள் தியா, மகன் தேவ் இருவரும் மும்பையில் படித்து வருகின்றனர். அவர்களைப் பார்க்க அடிக்கடி அங்கு சென்றுவருகிறேன். மற்றபடி நான் சென்னையில்தான் இருக்கிறேன். மும்பையில் செட்டிலாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.