“சமந்தா பல தடைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார்” – விஜய தேவரகொண்டா உருக்கம் | vijay devarakong gets emotional while talking about Samantha at Kushi event
ஹைதராபாத்: “நடிகை சமந்தா பல தடைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார். அவர் முகத்தில் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன்” என அவரது உடல்நிலை குறித்து விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள ‘குஷி’ படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் புரமோஷனின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் மியூசிகல் கான்சர்ட் நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் கலந்துகொண்டு நடனமாடினர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “சமந்தாவின் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன். படத்துக்காக அவர் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புன்னகையுடன் இப்படத்துக்கான படப்பிடிப்பை தொடங்கினோம். 60 சதவீத ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். 30 – 35 சதவீத ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது.
ஜூலையில் சமந்தாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவர் தன் உடல்நிலை சரியில்லை என கூறினார். அப்போது அதை நானும், இயக்குநரும் ஷிவாவும் அதனை பெரிய விஷயமாக எடுத்துகொள்ளவில்லை. ‘நீங்கள் அழகாக தானே இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை’ என கேட்டோம். ஆனால் அதன் பிறகு அவரின் வலியை புரிந்துகொண்டோம். அப்போதுதான் நான் சமந்தாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொண்டேன். அவர் அதைப்பற்றி தொடக்கத்தில் எதுவும் வெளிப்படுத்தவில்லை.
நாம் நமது கஷ்டங்களை வெளிப்படையாக பேசுவதில்லை என எனக்குத் தோன்றியது. இதனை ஒரு கட்டத்தில் சமந்தாவே உணர்ந்தார். அப்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு அவர் தன்னுடைய உடல்நிலை குறித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார்.
இன்று நாங்கள் இங்கே 50-60 பேரை சந்தித்தோம். அதில் 40 பேர் எங்களிடம் வந்து அவர்களின் உடல்நிலை தொடர்பான பிரச்சினைகளை எப்படி கையாள்கிறார்கள் என்று கூறியதோடு தங்களுக்கு சமந்தா உத்வேகமாக இருப்பதாகவும் கூறினர். சமந்தா இன்று ஆரோக்கியமாக இல்லை என்பது எனக்குத் தெரியும். அவர் ஒளியை எதிர்கொள்ளும் போதெல்லாம் தலை மற்றும் கண்வலியால் அவதிப்படுகிறார். இருந்தாலும் அவர் இன்று இங்கே வந்திருக்கிறார்.
நீங்கள் எல்லோரும் அவர் மீது அளவுகடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள் என்பது அவருக்கு தெரியும். இன்று அவர் உங்களுக்காக சிரித்து நடனமாடியிருக்கிறார். எல்லோரையும் விட செப்டம்பர் 1-ம் தேதி ‘குஷி’ படம் வெளியாகும் போது அவர் முகத்தில் புன்னகையை பார்க்க விரும்புகிறேன். அது என்னுடைய பொறுப்பு என கருதுகிறேன்” என பேசினார்.
சமந்தா பேசுகையில், “நன்றி, அனைவருக்கும் மிக்க நன்றி. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களுக்காக உழைக்கிறேன். நான் முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வந்து ஒரு பிளாக்பஸ்டரை கொடுப்பேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த அன்பின் காரணமாக, நான் செய்வேன்” என பேசினார்.