EBM News Tamil
Leading News Portal in Tamil

சோனம் கபூர் குறித்து மறைமுக சாடல்: மன்னிப்புக் கோரிய ராணா டகுபதி | Rana Daggubati apologises for his comments on Sonam Kapoor


ஹைதராபாத்: துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின்போது நடிகை சோனம் கபூர் குறித்து தான் மறைமுகமாக பேசியவை சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நடிகர் ராணா டகுபதி மன்னிப்புக் கோரியுள்ளார்.

துல்கர் சல்மான் நடிப்பில் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள படம் ‘கிங் ஆஃப் கோதா’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தைத் துல்கர் சல்மானின் வேஃபர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில். படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராணா டகுபதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், துல்கர் சல்மான் – சோனம் கபூர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘தி ஸோயா ஃபேக்டர்’ படத்தின் போது நடந்த சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார். இது குறித்து அவர் பேசியதாவது: “துல்கர் சல்மான் ஒரு இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் தயாரிப்பாளர்கள் எனது நண்பர்கள். அப்படத்தின் படப்பிடிப்பு எனது வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்ததால் நான் துல்கரை பார்க்கச் சென்றேன்.

அப்போது அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பெரிய ஹீரோயின் ஒருவர், தனது கணவருடன் போனில் லண்டனின் ஷாப்பிங் செல்வது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அவரது கவனமின்மை படப்பிடிப்புத் தளத்தில் ஒருவித விரக்தியை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சூழலிலும் கூட, துல்கர் மிகுந்து பொறுமையுடனும் புரிதலுடனும் நடந்து அந்த சூழலை அமைதிப்படுத்தினார்” என்று ராணா பேசியிருந்தார்.

இதில் ராணா நேரடியாக பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் நெட்டிசன்கள் பலரும் நடிகை சோனம் கபூரை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ராணா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார். தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “எனது கருத்துக்களால் சோனம் மீது ஏற்பட்டுள்ள எதிர்மறை எண்ணம், முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலும் நான் அந்த தகவலை மிகவும் சாதாரணமாகத் தான் கூறினேன். நண்பர்களாக, நாம் அடிக்கடி விளையாட்டுத்தனமான கேலிகளை பரிமாறிக்கொள்கிறோம். ஆனால் என்னுடைய வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

நான் மிகவும் மதிக்கும் சோனம் மற்றும் துல்கர் இருவரிடமும் நான் இதயபூர்வமான மன்னிப்பை கோருகிறேன். இந்த விளக்கம் எந்த ஊகங்களுக்கும் தவறான புரிதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன். புரிந்து கொண்டதற்கு நன்றி” என்று ராணா தனது பதிவில் கூறியுள்ளார்.