விக்ரமை நடிகராக நேசிக்கிறேன்: புகழ்கிறார் அனுராக் காஷ்யப் | I Love Vikram as an actor Praises Anurag Kashyap
இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் இயக்கி கடந்த மே மாதம் வெளியான இந்திப் படம், ‘கென்னடி’. இதில் ராகுல் பட், சன்னி லியோன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்காக முதலில் நடிகர் விக்ரமை தேர்வு செய்ததாகவும் காரணம் அவரின் ஒரிஜினல் பெயர் ‘கென்னடி’ என்றும் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் ராகுலை தேர்வு செய்ததாகவும் அனுராக் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த விக்ரம், ‘தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதுபற்றி இப்போது பேசியுள்ள அனுராக் காஷ்யப், “பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஷோபிதா துலிபாலாவிடம், விக்ரமைப் பார்த்தால், தனது மெசேஜுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்கச் சொன்னேன். அவர் சொல்லி, விக்ரம் பேசினார். அப்போதுதான் அவர் பயன்படுத்தாத தொலைபேசி எண்ணுக்கு நான் மெசேஜ் அனுப்பி இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர் இப்போது பயன்படுத்தும் எண்ணைக் கொடுத்தார். ‘சேது’ படத்தில் இருந்தே அவர் நடிப்பைக் கவனித்து வருகிறேன். ஒரு நடிகராக அவரை நேசிக்கிறேன். அவர் அற்புதமான நடிகர். அவரை மனதில் வைத்துதான் ‘கென்னடி’ படத்தின் கதையை எழுதினேன். இப்போது அவருக்கான கதை என்னிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்