சேலத்தில் கள்ள நோட்டுக்களை பழக்கத்தில் விட்ட 3 பேர் கைது
சேலம்: சேலம் மாவட்டத்தில் கள்ள நோட்டுக்களை பழக்கத்தில் விட்ட 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் டவுண் பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவர் கோட்டை மாரியம்மன் கோயில் எதிரே பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். கடந்த வாரம் அபுபக்கர் கடைக்கு வந்த மூவர் பிஸ்கர் வாங்கி கொண்டு ரூ.2000 நோட்டை கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த நோட்டு கள்ள நோட்டு போல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அபுபக்கர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதைபோன்று அப்பகுதிகளில் மற்ற கடைகளிலும் கள்ள நோட்டுக்கள் மாற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து தனிபடை அமைத்து விசாரணை நடத்திய சேலம் மாநகர போலீசார் சேலம் மாவட்டம் வீரானத்தை சேர்ந்த மணிவண்டன், மன்னார்பாளையத்தை சேர்ந்த வளர்மதி, சங்கீதா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இதுபோன்று பல இடங்களில் கள்ள நோட்டு மாற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 12,500 ரூபாய் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ள நோட்டுக்களை மாற்றி நல்ல நோட்டுகளாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20,550 ரூபாய்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.