விளையாட்டு என நினைத்த இந்தியருக்கு ‘ஜாக்பாட்’ – அபுதாபி லாட்டரியில் ரூ.19 கோடி பரிசு
விளையாட்டாகக் கூறுகிறார்கள் என நினைத்துக் கண்டுகொள்ளாமல் இருந்த இந்தியருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.19கோடி(1கோடி திர்ஹாம்) ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாழப்பள்ளி யோகனன் சிமன் எனத் தெரியவந்தது.அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட பிக் டிக்கெட் லாட்டரியில் வாழப்பள்ளி யோகனன் சிமன் லாட்டரி டிக்கெட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார்.
அந்த லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் இன்று நடந்தது. அதில் இந்தியர் வாழப்பள்ளி யோகனன் சிமனுக்கு ₹19 கோடி(ஒரு கோடி திர்ஹாம்) பரிசு கிடைத்துள்ளது.
இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டதும், யோகனனை தொலைப்பேசியில் அழைத்து, அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தபோது, தன்னைக் கிண்டல் செய்கிறார்கள் என நினைத்து பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதன்பின் அதிகாரப்பூர்வமாக அறிவித்து தகவல் அனுப்பிய பின்புதான் யோகனன் நம்பினார்.
இதுகுறித்து வாழப்பள்ளி யோகனன் சிமன், கலீஜ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். முதலில் இந்த செய்தியை எனக்குக் கூறியவுடன் என்னை நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள் என நினைத்து நம்பவில்லை.
அது குறித்து கண்டுகொள்ளவில்லை. ஆனால், எனக்கு அதிகார பூர்வமாக அதிகாரிகள் தகவல் அனுப்பியபின்புதான் நம்பினேன்’’ எனத் தெரிவித்தார்.
குலுக்கலில் மொத்தம் 10 பேருக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 9 பேர் இந்தியர்கள். ஒருவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். அபுதாபியில் நடந்து வரும் குலுக்கல் லாட்டரியில் தொடர்ந்து இந்தியர்கள் பரிசுகளை அள்ளி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் நகரைச் நகரைச் சேர்ந்த சந்தீப் மேனனுக்கு கடந்த மாதம் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக இந்த குலுக்கல் லாட்டரியில் கிடைத்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியர் ஒருவருக்கு 19 லட்சம் அமெரிக்க டாலர், அபுதாபி லாட்டரியில் பரிசாகக் கிடைத்தது. அவர் அரபு நாட்டைவிட்டுக் கிளம்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குலுக்கலில் இந்தப் பரிசு கிடைத்தது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் ஜான் வர்கீஸ் என்ற கேரள டிரைவருக்கு 1.20 கோடி திர்ஹாம் குலுக்கல் லாட்டரியில் பரிசாகக் கிடைத்தது. ஜனவரி மாதம், கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு 1.2 கோடி திர்ஹாம் பரிசு கிடைத்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அபுதாபி லாட்டரியில் நடத்தப்பட்ட மெகா குலுக்கல் போட்டியில் 10 பேர் பரிசு வென்றுள்ள நிலையில், அதில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.