EBM News Tamil
Leading News Portal in Tamil

வாட்ஸ் ஆப்பில் நோட்டீஸ் அனுப்பினாலும் செல்லும்

மும்பை : வழக்கு தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினாலும் செல்லும் என மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மும்பையை சேர்ந்த ரோகிதாஸ் ஜாதவ் என்பவர் எஸ்பிஐ வங்கியில் கிரெடிட் கார்டு கடன் பெற்றுள்ளார். 2010 ம் ஆண்டு ரூ.85,000 கடன் பாக்கி இருந்துள்ளது. 2015 ம் ஆண்டு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து ரூ.1.17 லட்சம் கடன் பாக்கி இருந்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்தாததால் ஜாதவ் மீது வழக்கும் தொடரப்பட்டது.
கடன் பாக்கியை திருப்பிச் செலுத்தும்படியும், விசாரணைக்கு ஆஜராகும்படியும் ஜாதவிற்கு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பியதுடன், வங்கி சார்பில் ஜாதவின் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமும், பிடிஎப் வடிவில் வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை ஜாதவ் பெற்று, அதனை படித்ததற்கான அடையாளமும் காட்டப்பட்டுள்ளது. ஆனால், தான் வீடு மாறி விட்டதால், தனக்கு அந்த நோட்டீஸ் கிடைக்கவில்லை எனவும், அதனால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் கோர்ட்டில் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்க முறுத்த மும்பை ஐகோர்ட், ஜாதவ் அந்த நோட்டீசை படித்ததற்கான எலக்ட்ரானிக் சான்றை காட்டி உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான நோட்டீஸ்கள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்டாலும் அது செல்லத்தகுந்தவை தான் என உத்தரவிட்டுள்ளது.