பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க 4 வழிகள்
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில் சில நாட்களாக பெயரளவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விலையைக் குறைக்க ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ‘நீண்ட காலத் தீர்வு’ காண திட்டமிட்டு வருவதாகக் கூறி வருகிறது. கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு இன்னும் கைவிடவில்லை” என்று கூறியிருக்கிறார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றையும் ஜிஎஸ்டியில் கொண்டுவந்தால் அவற்றின் விலை கட்டுக்குள் வரும் என்றும் அது நிரந்தரத் தீர்வு இல்லை என்றும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
இச்சூழலில் பெட்ரோல், டீசல் ஆகிய அன்றாட வாழ்வின் அத்தியாவசிய எரிபொருட்களின் விலையைக் குறைக்க, அரசின் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
நான்கு வழிகள்
1. பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் 50% அவற்றின் மீதான வரிகள்தான். ஜிஎஸ்டிக்குக் கீழ் அவற்றைக் கொண்டுவந்து 40% வரி விதித்தாலும் 10% வரிச்சுமை குறையும். இதனால் குறிப்பிடத்தக்க அளவுக்கு விலை சரியக்கூடும். அது தொடர்பாகவும் மாற்று வழிகள் குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.
2. கடந்த சில நாட்களில் கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியதில் அதிக பலனை அடைந்திருப்பவர்கள் எண்ணெய் நிறுவனங்கள்தான். குறிப்பாக, நாட்டின் 20% எண்ணெய் தேவையைப் பூர்த்திசெய்யும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் மிகவும் ஆதாயம் கண்டுள்ளது. இந்தக் காரணத்தினால் அரசு எண்ணெய் நிறுவனங்களை அணுகி பெட்ரோல், டீசலை குறைந்த விலைக்கு விநியோகஸ்தர்களுக்கு வழங்குமாறு கேட்கலாம்.
3. பெட்ரோல் டீசல் விற்பனையை இந்திய கமாடிட்டி பரிவர்த்தனையின் (Indian Commodity Exchange – ICEX) கீழ் கொண்டுவரும் கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளதாக அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார். இதற்காக அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துவிட்டது. ஆனால், கமாடிட்டி வர்த்தகத்தை மேற்பார்வை செய்யும் செபி (SEBI) அமைப்பின் ஒப்புதலையும் பெற வேண்டியுள்ளது.
இந்த முறையில், 100 லிட்டர் பெட்ரோலை இன்றைய விலையில் ஒரு மாதத்திற்கு (முதல் 12 மாதங்கள் வரை) வாங்கலாம். இதனால் இன்று இருக்கும் அதே விலைக்கே மாதத்தின் கடைசி நாள் வரை பெட்ரோலை வாங்க முடியும். இதற்கான செலவு 100 ரூபாய் மட்டுமே. தினசரி எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றுவதற்கு இந்த முறை ஒரு கட்டுப்பாட்டை விதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (Organisation of the Petroleum Exporting Countries – OPEC) ஆசிய நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. மேற்கத்திய நாடுகளுக்கான விலையைவிட ஆசிய நாடுகளுக்கான விலை உயர்வாக உள்ளது. இதற்கு ஆசிய ப்ரீமியம் (Asian premium) என்ற பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய மற்ற ஆசிய நாடுகளின் ஆதரவையும் திரட்டி குறைவான விலைக்கு கச்சா எண்ணெயைப் வாங்க முயற்சிக்கிறது.
சர்வதேசச் சந்தை
இந்த வாய்ப்புகள் எதுவும் கைகூடவில்லை என்றால் அதிர்ஷ்டத்தையே நம்பி இருக்க வேண்டும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வேண்டும். இது போன்ற நல்வாய்ப்பு கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டில் அமைந்தபோது, அரசுக்கு 2.7 லட்சம் கோடி வரி வருவாய் ஒரே ஆண்டில் கிடைத்தது.
மாநில அரசுகள்
இதனிடையே, மாநில அரசுகள் நினைத்தால் தங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் ஆதாயத்தை விட்டுக்கொடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைந்தபட்சம் தலா 2 ரூபாய் குறைக்கலாம் என்று ஸ்டேட் வங்கி ஆய்வறிக்கை பரிந்துரைத்தது. இந்த அறிக்கை வெளியான மறுநாளே கேரள அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜூன் 1ஆம் தேதி முதல் தலா ஒரு ரூபாய் குறைப்பதாக அறிவித்தது.