பழைய கார் விற்பனைக்கு வரி உயர்வு; பாப்கார்னுக்கு சுவைக்கு ஏற்ப விலை: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு | GST Council ups tax on sale of used cars by businesses; says rate on popcorn depends on flavour
புதுடெல்லி: ஏஏசி பிளாக்குகள், செறிவூட்டப்பட்ட அரிசி, சுவையூட்டப்பட்ட பாப்கார்ன் ஆகியவற்றுக்கான வரிகளின் புதிய விகிதம், பழைய கார் விற்பனைக்கு வரி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 55-வது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக சாம்பல் உள்ளடக்கம் கொண்ட ஆட்டோக்ளேவ்ட் ஏரேட்டட் காங்கீட் (ஏஏசி) பிளாக்குகள் ஹெச்எஸ் 6815 குறியீட்டின் கீழ் வரும் என்றும், அதற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுனவங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களின் விற்பனை வரி விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர்கள் விற்பனை மற்றும் வாங்குதலுக்கு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வரிவிகிதத்தின் படி, EVs உட்பட அனைத்து பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு (பெட்ரோல் வாகனங்களின் இயந்திர திறன் 1200 சிசி அல்லது நீளம் 4000 மிமி அதிகம், டீசல் வாகனங்களுக்கு இயந்திர திறன் 1500 சிசி அல்லது 4000 மிமி நீளத்துக்கும் அதிகம் மற்றும் எஸ்யுவி) 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. தற்போது இது 18 சதவீதமாக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதம் வாகனத்தை விற்பனை செய்பவரின் மார்ஜின் தொகைக்கு மட்டுமே பொருந்தும், அதாவது வாங்கும்போது இருந்த விலைக்கும் விற்கும்போது இருக்கும் விலைக்கும் உள்ள வித்தியாச தொகைக்கு மட்டுமே வரி பொருந்தும்.
இதனிடையே, தற்போதுள்ள ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிமையாக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியின் வரியை 5 சதவீதம் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அதேபோல், சாப்பிடுவதற்கு தயாராக வழங்கப்படும் பாப்கார்ன்களின் வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. முன்கூட்டியே பேக் செய்யப்பட்டோ அல்லது லேபில் இடப்படாமலோ, நன்கீன்ஸ் போல உப்பு மற்றும் மசாலா கலந்து வழங்கப்படும் பாப்கார்ன்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். முன்பே பேக் செய்யப்பட்டு லேபிலிடப்பட்டிருந்தால் அவற்றுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
என்றாலும், காராமெல் பாப்கார்ன் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட, அதாவது பாப்கார்னின் இயல்பான சுவையை சர்க்கரை சேர்ந்து மாற்றி சுவைக் கூட்டியிருந்தால் அவை ஹெச்எஸ் 1704 90 90 -ன் கீழ் வரும். அந்த வகை பாப்கார்ன்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் கூட்டத்தில் ஒருமித்த கருத்துகள் எட்டப்படாததால், மேலும் ஆய்வுக்காக காப்பீடு தொடர்பான விஷயங்களை கவுன்சில் ஒத்திவைத்துள்ளது.
மேலும், இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் கடிகாரங்கள், பேனா, காலணிகள் (ஷூ) மற்றும் ஆடைகள் போன்றவற்றுக்கான வரிகளை உயர்த்துவது உள்ளிட்ட 148 பொருள்களுக்கான வரி விகிதத்தை நியாப்படுத்துவதற்கு தேவையான முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு (Sin goods) 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற நான்கடுக்கு வரி விகிதங்களுக்கு பதிலாக தனியாக 35 சதவீதம் வரி விகிதத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.