காப்பீடு தவணைக்கான வரி குறைப்பு மீதான முடிவை தள்ளிவைத்தது ஜிஎஸ்டி கவுன்சில்! | GST Council postpones decision to cut tax on insurance
ஜெய்சால்மர்: ஆயுள், மருத்துவ காப்பீடு தவணை மீதான வரியை குறைப்பது குறித்த முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் தள்ளி வைத்ததுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயுள், மருத்துவ காப்பீடு தவணைக்கு வரி விலக்கு அளிப்பது அல்லது வரியை குறைப்பது குறித்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான ஜிஎஸ்டி மீதான அமைச்சர்கள் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு தவணைக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும் என வலியுறுத்தினர். சில உறுப்பினர்கள் இப்போது உள்ள 18% வரியை 5% ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து சாம்ராட் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு தவணை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். எனவே, ஜிஎஸ்டி மீதான அமைச்சர்கள் குழு வரும் ஜனவரியில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தும்” என்றார்.
ஆயுள், சுகாதார காப்பீடு தவணை மீதான வரியை குறைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து, பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான ஜிஎஸ்டி மீதான அமைச்சர்கள் குழு தனது பரிந்துரையை வழங்கி உள்ளது. அதில், “டேர்ம் ஆயுள் காப்பீடு தவணைக்கும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தவணைக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்.
இதுபோல அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு தவணைக்கும் விலக்கு அளிக்க வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட காப்பீட்டுக்கான தவணைக்கு இப்போது உள்ள 18 சதவீத ஜிஎஸ்டியை தொடரலாம்” என கூறப்பட்டுள்ளது.