ஆசியாவின் மிகச் சிறந்த நாணயங்கள்: இந்திய ரூபாய்க்கும் இடம் | Asia s best currencies Indian rupee also has a place
புதுடெல்லி: ஆசியாவில் மிகச்சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாயும் இடம்பெற்றுள்ளதாக மக்களவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதில்: மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி, சர்வதேச சவால்களுக்கு இடையிலும் ஆசிய அளவில் சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நாணயங்களில் ஒன்றாக இந்தியா ரூபாய் உருவெடுத்துள்ளது. அது தனக்கான இடத்தை வலுவான நிலையில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆசிய அளவில் ரூபாயின் செயல்பாடு வலிமையாக இருப்பது இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
அமெரிக்க டாலரில் காணப்பட்ட ஒட்டுமொத்த வலுவான நிலையால் இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 19 நிலவரப்படி 1.4 சதவீதம் சரிவை சந்தித்தது. அதேசமயம், ஆசிய அளவில் ஜப்பானின் யென் 8.8 சதவீதமும், தென் கொரியாவின் வோன் 7.5 சதவீதமும் சரிவடைந்துள்ளன. ஜி10 நாடுகளின் கரன்சி (பிரிட்டன் பவுண்ட் தவிர்த்து ) அனைத்தும் நடப்பாண்டில் 4 சதவீதத்துக்கும் அதிகமாகவே குறைந்துள்ளன.
அவற்றுடன் ஒப்பிடும்போது இந்திய கரன்சியின் நிலை வலுவான இடத்தில் உள்ளது. இது, இந்தியாவின் உறுதியான மற்றும் நெகிழ்வான பொருளாதார அடிப்படை, பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு சான்றாக அமைந்துள்ளது. இவ்வாறு பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.