EBM News Tamil
Leading News Portal in Tamil

ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது: அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து மவுனம் கலைத்தார் அதானி | Gautam Adani responds to US fraud charges: Every attack makes us stronger


ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது என அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

சோலார் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு, ஆந்திரா உட்பட 5 மாநில அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்தாக கவுதம் அதானி மற்றும் அவரது சாகக்கள் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி மீது கூறப்படும் இரண்டாவது மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். இதற்கு முன்பாக, பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அதானி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டியிருந்தது.

அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குளிர்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், இரு அவைகளின் செயல்பாடும் தொடர்ச்சியாக முடங்கியுள்ளது.

இந்த நிலையில், தம் மீதான குற்றச்சாட்டு குறித்து கவுதம் அதானி முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது: துறைமுகம் முதல் மின் உற்பத்தி வரையிலான அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் உலகத் தரம் வாய்ந்த ஒழுங்குமுறை விதிகளுக்கு இணக்கமாக செயல்படுவோம் என உறுதி அளித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு உள்ளாக, அதானி கிரீன் எனர்ஜி விதிகளை மீறி செயல்பட்டதாக அமெரிக்காவிலிருந்து குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டோம். இதுபோன்ற சவால்களை நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இதுபோன்ற ஒவ்வொரு தாக்குதலும் எங்களை மேலும் வலிமையாக்குகிறது. ஒவ்வொரு தடைக்கல்லும் அதானி குழுமம் இன்னும் மீண்டெழ படிக்கல்லாக மாறுகிறது.

உண்மையை விட பொய் வேகமாக பரவும் காலம் இது. இந்த குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியான முறையில் எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். உலக தரத்திலான ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கி நடப்போம் என்ற எங்களின் முழுமையான உறுதிப்பாட்டை மீண்டும் ஒரு முறை உறுதியுடன் நினைவு கூர்கிறோம். இவ்வாறு அதானி தெரிவித்துள்ளார்.