‘போலி அரசு வெப்சைட்’ உருவாக்கி சிறு, குறு தொழில் துறையினரை குறிவைத்து மோசடி… உஷார்! | about Fraud creating a fake government website
கோவை: கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். குறு, சிறு தொழில்முனைவோரை குறிவைத்து சமீப காலமாக நூதன சைபர் கிரைம் நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பான புகார்கள் தினமும் வருவதாக தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில்முனைவோர் சங்க (டான்சியா) மாநில துணைத் தலைவர் சுருளிவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியவது: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பயன்பெறும் வகையில் பதிவு செய்வதில் தொடங்கி முதலீட்டு மானியம், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அமல்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் பயன்பெற ‘உதயம்’ போன்ற அரசு ஆன்லைன் வலைதளங்களில் விவரங்களை தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்.
முதலீட்டு மானியம் போன்ற திட்டங்களில் மாவட்ட தொழில் மையம் வழிகாட்டுதல்படி பெற்றுக் கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் சமீப நாட்களாக குறு, சிறு தொழில்முனைவோரிடம் நூதன நிதி மோசடி தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. ‘உதயம்’ போன்ற அரசு வலைதள பக்கங்களில்கூட போலியான வலைதளபக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன. gov.in என முடியும் வலைதள பக்கங்கள்தான் அரசுடையவை.
பெரும்பாலான தொழில் முனைவோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு தங்கள் விவரங்களை போலியான வலைதள பக்கங்களில் தெரிவித்து, அதற்கு கட்டணத்தை செலுத்துகின்றனர். குறுந்தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் ‘முத்ரா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சொத்து பிணையமின்றி கடனுதவி வழங்கும் இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை குறிப்பிட்ட பிரிவில் கடனுதவி வழங்கப்படுகிறது. சமீப நாட்களாக தொழில் முனைவோரின் மொபைல்போன் எண்களில் எஸ்எம்எஸ் மூலம் முத்ரா வங்கி பெயரில் நிதி மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள் ளன.
அதில், ‘முத்ரா’ திட்டத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனுதவி பெறலாம். மிகக் குறைந்த வட்டி, மானியம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு என தெரிவித்து மொபைல் போன் எண்கள் அனுப்பப் படுகின்றன. அங்கீகாரமில்லாத இதுபோன்ற மோசடி நபர்களிடம் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தால் கடும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
தொழில்முனைவோர் விழிப் புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். அரசு தரப்பிலும் போலியான வலைதள பக்கங்களை கண்டறிந்து அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்ட தொழில் மைய (டிஐசி) பொதுமேலாளர் சண்முக சிவா கூறும்போது, ‘‘போலியான நபர்கள் அனுப்பும் ‘எஸ்எம்எஸ்’ உள்ளிட்ட தகவல்களை நம்பி ஏமாறாமல் இருக்க தொழில்முனைவோர் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை மாவட்ட தொழில் மைய அதிகாரிகளிடம் நேரில் கேட்டு தெளிவு பெறலாம்’’ என்றார்.