ஸோமாட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் குஜராத் பெண்: குழந்தையுடன் பைக்கில் சென்று உணவு விநியோகம் | Woman takes along child while working as Zomato delivery agent in Gujarat,
அகமதாபாத்: குஜராத்தின் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த ஸோமாட்டோ பெண் ஊழியர் ஒருவர் தனது குழந்தையை பைக் முன்பு அமரவைத்துஉணவு டெலிவரி செய்யும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.
ராஜ்கோட் நகரைச் சேர்ந்த அந்த பெண் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர். கல்யாணத்துக்கு பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக அந்தப் பெண் வேலைக்குசெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், குழந்தையை வைத்துக்கொண்டு அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர் ஸோமாட்டோ வேலையை தேர்வு செய்தார். இதற்கு, அவர் இந்த வேலையை குழந்தையுடன் பார்க்கலாம் என்பதுதான்.
இதுகுறித்து ஸோமாட்டோ உணவு விநியோக பெண் ஊழியர் கூறுகையில், ‘‘பல இடங்களில் வேலை தேடினேன். குழந்தை இருப்பதால் அவர்கள் நிராகரித்தனர். பார்த்து கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாததால் என்னாலும் எனது மகனை தன்னந்தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்ல முடியாத சூழல். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.
நம்மிடம்தான் பைக் உள்ளதே, பின் ஏன் நமது மகனுடனே சென்று வேலை செய்யக் கூடாது என்று. அதன் பிறகுதான் ஸோமாட்டோ நிறுவனத்தில் சேர்ந்து உணவு விநியோக வேலையை எனது மகனுடன் செய்து வருகிறேன்” என்றார். அவரது வீடியோவை பார்த்த பலர் ‘‘தாயின் உறுதிக்கு நிகரில்லை. நாம் அனைவரும் அவரைப்போன்று வலிமையாகவும், உறுதியாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளனர்.