ஆசிய வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மோர்கன் ஸ்டான்லி ஆய்வில் தகவல் | India will play an important role in Asian development
நியூயார்க்: ஆசிய பிராந்திய வளர்ச்சியை இந்தியா முன்னெடுத்துச் செல்லும் என்று சர்வதேச நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஆசியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவின் பங்களிப்பு குறையும். இந்த 4 நாடுகளின் மொத்த ஜிடிபி 2027-ம் ஆண்டில் 57 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனாவுக்கு முன்பு அது 33% ஆக இருந்தது. இந்நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள், புவி அரசியல் ஆகியவை ஆசியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆசியாவின் பொருளாதாரம் 1980-ல் 2.1 டிரில்லியன் டாலராக இருந்தது. தற்போது அது 34 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2027-ல் அது 39 டிரில்லியன் டாலராக உயரும். இந்த 4 நாடுகளின் பங்களிப்பால் வேகமாக வளரும் பொருளாதார பிராந்தியமாக ஆசியா உருவெடுக்கும்” என தெரிவித்துள்ளது.