ஹரியானாவில் 1,500 கிலோ எடை கொண்ட ‘காஸ்ட்லி’ எருமைக்கு ஒரு நாள் செலவு ரூ.1,500 | 1500 Kg Buffalo Eats 20 Eggs A Day In Haryana
ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் 1,500 கிலோ எடை கொண்ட எருமை மாடும், அதன் `காஸ்ட்லி மெனு’வும்தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது அந்த எருமை ஒரு நாளைக்கு 20 முட்டைகள், உலர் பழங்கள், அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வதாக சொல்லப்படுகிறது.
இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் வேளாண் துறை கண்காட்சியில் பல்வேறு வகையான கால்நடைகள் பங்கேற்று வருகின்றன. அந்த வகையில், மீரட்டில் நடந்த அகில இந்திய விவசாயிகள் கண்காட்சி போன்ற நிகழ்வுகளில் கவனத்தை ஈர்த்தது அன்மோல். அன்மோல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த எருமை மாடு 1,500 கிலோ எடையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பார்ப்பதற்கு கொழுக்கு மொழுக்கென்று வித்தியாசமாக இருக்கும் எருமை மாடுகள் மக்களின் மனதை கவர்வது வழக்கம்.
இந்தச் சூழலில் அதன் உரிமையாளர் கில், அன்மோல் குறித்து குறிப்பிடுகிறார். இதற்காக நாள்தோறும் ரூ.1500 செலவிட்டு உணவளித்து வருவது அனைவரையும் வாயில் கைவைக்க செய்துள்ளது. தற்போது, அதனுடைய காஸ்ட்லி மெனுதான் தான் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
அன்மோலின் உரிமையாளரான கில், அதன் ஆரோக்கியத்தையும் வலிமையையும் பராமரிக்க, உலர் பழங்கள் மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை கொடுத்து வருகிறார். அதன் மெனுவில், 250 கிராம் பாதாம், 30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளை, 5 கிலோ பால், 20 முட்டைதான் இதன் அன்றாட உணவாக உள்ளது. இன்னும் உடல் எடையை அதிகரிக்க ஆயில் கேக், நெய், சோயாபீன்ஸ், சோளம் போன்றவையும் கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளிப்பாட்டப்படுவதாக கூறப்படுகிறது. அன்மோலின் தாய் மற்றும் சகோதரியும் இவ்வாறு வளர்க்கப்பட்டு பல கோடிக்கு விலை போயிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், அன்மோலின் தாய் ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் கொடுப்பதில் பெயர் பெற்றவள் என்று புகழாரம் சூட்டப்படுகிறாள்.
அன்மோலின் விந்துவுக்கு பயங்கர கிராக்கி இருப்பதால் அதுவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் மட்டும் மாதந்தோறும் 4-5 லட்சம் வருவாய் ஈட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. அன்மோலை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்தால் அதன் மதிப்பு ரூ.23 கோடியாம். குடும்ப உறுப்பினர் போல இருப்பதால் , அதனை தற்போது விற்கும் எண்ணமில்லை என்று கூறுகிறார் அதன் உரிமையாளர் கில்.