EBM News Tamil
Leading News Portal in Tamil

உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1.45 கோடியில் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தீவிரம் | Intensity of Construction of Floating Solar Power Plant at Ukkadam Periyakulam at a Cost of Rs 1.45 Crore


கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1.45 கோடி மதிப்பில் மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் கோவை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் நீரேற்று நிலையங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட உயர் அழுத்த மின் பயன்பாடு உள்ள பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன. இந்த உயர் அழுத்த மின் பயன்பாட்டு கட்டமைப்புகளுக்காக, மாநகராட்சியின் சார்பில் மாதம் தோறும் ரூ.10 கோடி வரை மின்கட்டணமாக மின்வாரியத்துக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர, மித அழுத்த மின் பயன்பாடுகளுக்கும் மாதந்தோறும் பல கோடி மாநகராட்சி சார்பில் மின் கட்டணமாக செலுத்தப்பட்டு வருகிறது. மின்வாரியத்துக்கு செலுத்தப்படும் கட்டணங்களை குறைக்கும் வகையில், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: “அதன்படி, உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை ஒட்டியுள்ள இடத்திலும், கவுண்டம் பாளையத்திலும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்திலும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உக்கடம் பெரியகுளத்தின் ஒருபகுதியில், மிதக்கும் சூரிய ஒளி மின்உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நமக்கு நாமே திட்டத்தில்…- இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “சூரிய ஒளி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதன்படி ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ், சுவிட்சர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்பு மற்றும் தமிழக அரசின் நிதிப் பங்களிப்புடன் ரூ.1.45 கோடி மதிப்பில், உக்கடம் பெரியகுளத்தில், ஏறத்தாழ 50 சென்ட் பரப்பளவிலான இடத்தில் மிதக்கும் வகையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ரூ.72.50 லட்சம், சுவிட்சர்லாந்து அரசு சார்பில் ரூ.72.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 260 சூரிய ஒளி மின்உற்பத்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து பிரத்யேக மிதவைகள் வரவழைக்கப்பட்டு, அது குளத்தின் மீது போடப்பட்டு, அதன் மீது பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை 60 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

தற்போது பேனல்களுக்கு இடையே கேபிள்கள் பொருத்துதல், தெற்கு கரைப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் பொருத்துதல், இன்வெர்டர் கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும். அதைத் தொடர்ந்து இங்கு தினமும் 154 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யப்படும். அதாவது, தினமும் 693 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்” என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.