EBM News Tamil
Leading News Portal in Tamil

குறு, சிறு தொழில்கள் வளர்ச்சிக்கு ‘பிராண்டிங்’, ‘மார்க்கெட்டிங்’ மிக அவசியம் – ‘சிஐஐ’ நிகழ்வில் தகவல் | Branding and Marketing are essential for the development of micro and small businesses


கோவை: “குறு, சிறு தொழில்துறையினர் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்ய ‘பிராண்டிங்’ மற்றும் ‘மார்க்கெட்டிங்’ ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என, ‘சிஐஐ’ நிகழ்ச்சியில் தொழில் துறையினர் வலியுறுத்தினர்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) கோவை சார்பில், தொழில்முனைவோருக்கான இரண்டு நாட்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, ‘புதிய பயணம்’ அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று தொடங்கியது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்நிகழ்வை தொடங்கி வைத்து பேசும் போது, “உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கோவை மாவட்டம் கொண்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தொழிற்பேட்டைகள் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்ய உதவுகின்றன. திறமையான தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தொழில்துறைக்கு உள்ளே வர தொடங்கியுள்ளதால் அதற்கேற்ப திறமையான பணிவாய்ப்பை தொழில்முனைவோர் உருவாக்க வேண்டும்” என்றார்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு(சிஐஐ) தென்மண்டல தலைவர் நந்தினி பேசும் போது, “அதிக வேலைவாய்ப்பு வழங்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் குறுந்தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கும்” என குறிப்பிட்டு, “பிரதமர் மோடி அத்துறை வளர்ச்சிக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக தொழில் ஊக்குவிப்புக்கான தேசிய மையம் (சென்டர் ஆஃப் எக்ஸ்செலன்ஸ்) இரண்டாம் நிலை நகரமான மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாற, திறன் மேம்பாடு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ‘சிஐஐ’ தொழில் அமைப்பு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) கோவை, தலைவர், இளங்கோ பேசும் போது, “கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் நிலவிய பொருளாதார நெருக்கடி சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோவை மாவட்டத்தில் 25 சதவீத குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது குறுந்தொழில் நிறுவனங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் நெருக்கடிகளை எதிர்கொண்டு நிலையான வளர்ச்சியை பதிவு செய்ய உதவும் வகையில் அந்நிறுவனத்தினர் தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

குறிப்பாக பொருட்களை ‘பிராண்டிங்’ செய்யவும், ‘மார்க்கெட்டிங்’ செய்யவும் அதிக அக்கறையை குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவே சிறப்பான வளர்ச்சிக்கு உதவும். பிரபல ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் பிராண்டிங், மார்க்கெட்டிங் சிறப்பான முறையில் செய்து சாதித்துள்ளது இதற்கு சான்றாகும்” என்றார். சிஐஐ கோவை, துணை தலைவர் ராஜேஷ் துரைசாமி உள்ளிட்ட தொழில்முனைவோர் பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீகுமரவேலு நன்றி கூறினார். தொடக்க விழாவை தொடர்ந்து தொழில்முனைவோருக்கு பல்வேறு பிரிவுகளில் வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர்.