EBM News Tamil
Leading News Portal in Tamil

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.18,000 கோடி கடனுதவி: இதுவரை 35 லட்சம் பேர் பயனடைந்ததாக அரசு தகவல் | Rs 18,000 crore loan for women self-help groups: 35 lakh people have benefited so far: TN Govt


சென்னை: நடப்பாண்டில் இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை 35 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் 4.73 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஊரகப் பகுதியில் 3.29 லட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புற பகுதியில் 1.44 லட்சம் சுய உதவிக்களும் செயல்பாட்டில் இருக்கின்றன. மொத்தம் 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் உள்ள சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக இருந்து பயன்பெற்று வருகின்றனர்.

இந்த சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதற்காக ஒவ்வொரு நிதியாண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தேவைப்படும் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் (2024-25) மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு இலக்காக ரூ.35 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 2,69,472 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18,066 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மொத்தம் 35 லட்சத்து 3,136 பேர் பயனடைந்துள்ளதாகவும் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள கடன் இணைப்புகளும் நிதியாண்டு முடிவதற்குள் வழங்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.