EBM News Tamil
Leading News Portal in Tamil

மசாலா பொடி தொகுப்புகள் விற்பனை: வழிகாட்டும் அலங்காநல்லூர் வட்டார விவசாயிகள் | Farmers Selling Masala Powder Packages: Mentoring Alanganallur Farmers


மதுரை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்து 14 பொருட்கள் அடங்கிய மசாலா பொடி தொகுப்பை விவசாயிகளுக்கே விற்பனை செய்து வழிகாட்டுகின்றனர் அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த விவசாயிகள்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வேளாண்மை விற்பனை வணிகத் துறை மூலம் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 6 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இதில் அலங்காநல்லூர், மதுரை மேற்கு வட்டார 15 கிராமங்களில் இருந்து 620 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதிலுள்ள விவசாயிகளிடமிருந்து தேங்காய், கொப்பரை கொள்முதல் செய்து வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் கொய்யா, வாழை, மக்காச்சோளம் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். அடுத்தக் கட்ட முயற்சியாக சமையலுக்கு பயன்படும் மசால் பொடிக்கு தேவையான சம்பா மிளகாய் வத்தல், நாட்டு மல்லி, மஞ்சள், சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சோம்பு, கடுகு, வெந்தயம், மிளகு, பெருங்காயம், கசகசா, பட்டை இலை, உளுந்தம் பருப்பு உள்பட மொத்தம் 14 பொருட்களை ரூ.750-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கான விற்பனையை வேளாண் வணிகப் பிரிவு துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி விற்பனையை துவக்கி வைத்தார். இதில் நிறுவன இயக்குநர்கள் எம்.தனிராஜன், க.தங்கராஜ், ஆ.அனுமதிபாண்டி மூ.மயில் வாகனம், பா.தேன்மொழி, வீ.ஆறுமுகம், சி.வெள்ளையன், மா.சாக்ரடீஸ், தேசிய வேளாண் நிறுவன அலுவலர் க.முருகன், முதன்மை செயல் அலுவலர் ரா.ராஜபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரா.ராஜபாண்டி கூறியதாவது: “எங்களிடம் உறுப்பினராக உள்ள விவசாயிகள் விளைவிக்கும் மஞ்சள், கொத்தமல்லி, மிளகாய் போன்ற பொருட்களை கொள்முதல் செய்கிறோம். மற்ற பொருட்களை மொத்த விற்பனை கடைகளில் முதல் தர பொருட்களை கொள்முதல் செய்து 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.750-க்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம்.

மற்ற கடைகளில் இதனை ரூ.900 வரை விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் தரமான பொருட்கள் குறைந்த விலையில் உறுப்பினர்களுக்கு கிடைக்கிறது. இதில் கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கே செல்கிறது. அடுத்த கட்டமாக நஞ்சில்லா காய்கறிகள், பழங்களை விளைவித்து விற்பனை செய்யவுள்ளோம். மேலும் எள், கடலை, தேங்காயிலிருந்து எண்ணெய்யாக மதிப்புக் கூட்டு பொருள் தயாரித்து விற்பனை செய்யவுள்ளோம்” என்று ராஜபாண்டி கூறினார்.