EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 15 சுங்கச்சாவடிகள் அமைப்பு: மத்திய அரசு தகவல் | In Tamil Nadu, 15 toll plazas have been set up on national highways in the last 5 years


புதுடெல்லி: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 15 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, “நாட்டில் 30.06.2024 வரை தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 983 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 67 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 457 புதிய சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 15 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எல்&டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் 1,124.19 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஓமலூர் சுங்கச்சாவடியில் ரூ. 635.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ. 981.56 கோடி அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகள்: தமிழகத்தில் பாரத்மாலா பரியோஜனா என்னும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 23,230.90 கோடி ரூபாய் செலவில் 625.80 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்களில் 433.54 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைப் பணிகள், 12,717.88 கோடி ரூபாய் செலவில் முடிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் 31 கிலோ மீட்டர் நீள சாலைத் திட்டத்தில் சுமார் 12 கிலோ மீட்டர் அளவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மதுரை-செட்டிகுளம் பிரிவில் மதுரை – நத்தம் – துவரங்குறிச்சி நெடுங்சாலைப் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மதுரை – மேலூர் – காரைக்குடி – தஞ்சாவூர் பிரிவில் 45.86 கிலோ மீட்டர் தூர சாலையில் 34.41 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளன. பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையில், காரைப்பேட்டையிலிருந்து வாலாஜாபாத் பிரிவில் 36.08 கிலோ மீட்டருக்கும், சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை மற்றும் காரைப்பேட்டை – வாலாஜாப்பேட்டை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை – கன்னியாகுமரி பிரிவில் மதுரை வட்டச்சாலையின் வாடிப்பட்டி – தாமரைப்பட்டி பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பாதிக்கு மேல் முடிவடைந்துள்ளன. பெங்களூரு – கோயம்புத்தூர் பிரிவில், தொரப்பள்ளி அக்ரகாரத்திலிருந்து ஜித்தண்டஹல்லி வரையில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜித்தண்டஹல்லியிலிருந்து தர்மபுரி வரையிலும் பணிகள் முடிவடைந்துள்ளன.

சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிபாலாவிலிருந்து வாலாஜாபேட்டை வரையிலும், வாலாஜாபேட்டையிலிருந்து அரக்காணம் வரையிலும், அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் வரையிலும், காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும் 4 வழிச்சாலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மதுரை – கொல்லம் நெடுஞ்சாலையில், திருமங்கலத்திலிருந்து வடுகப்பட்டி வரையிலும், வடுகப்பட்டியிலிருந்து தெற்கு வேங்கநல்லூர், ராஜபாளையம் வரையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரு – கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில், தொப்பூர் – மேட்டூர் – பவானி பிரிவில் 85 கிலோ மீட்டர் தூரப் பணிகள் முடிவடைந்துள்ளன” என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.