தமிழக மின்வாரியம் சார்பில் 1000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க ஒப்பந்தம் | Agreement to purchase 1000 MW solar power on behalf of tneb
சென்னை: இந்திய சூரிய எரிசக்தி கழகத்திடம் 1,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை வாங்க தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த 2023-24-ம் ஆண்டில் தமிழகத்தில் 1.28 கோடி மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 24 ஆயிரம் மில்லியன் யூனிட் பசுமை எரிசக்தி மின்சாரம் ஆகும். தமிழகத்தில் 10,592 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், கடந்த 2023-24-ம் ஆண்டில் 13,500 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, தமிழகத்தில் 8,146 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில், கடந்த 2023-24-ம் ஆண்டில் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் சூரியசக்தி மின்னுற்பத்தியை 5 முதல் 6 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சூரியசக்தி மின்சாரத்தைக் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும் அல்லது வெளியில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
அந்த வகையில், மின்வாரியம் 1000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை வாங்க, இந்திய சூரிய எரிசக்தி கழகத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.