உச்சம் தொட்ட ஸோமாட்டோ பங்குகள்: இந்திய எலைட் பில்லியனர் கிளப்பில் நிறுவனர் தீபிந்தர் கோயல் | Zomato shares peak Founder Deepinder Goyal in India s elite billionaire club
மும்பை: தேசிய பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் ஸோமாட்டோ நிறுவனப் பங்குகளின் விலை உச்சம் தொட்டதையடுத்து அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் இந்திய எலைட் பில்லியனர் கிளப்பில் இணைந்துள்ளார்.
டெல்லி ஐஐடி பட்டதாரியான தீபிந்தர் கோயல், பங்கஜ் சத்தாவுடன் இணைந்து கடந்த 2008-ம் ஆண்டு ஃபுடீபேஎன்ற உணவக டைரக்டரியை தொடங்கினார். அதன்பின்னர் 2010-ல் ஸோமாட்டோ நிறுவனமாக அதனை மாற்றியமைத்தார். இதையடுத்து 2018-19-ல் அந்த நிறுவனம் 1 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது. இதையடுத்து, ஸோமாட்டோ யூனிகார்ன் நிறுவனமாக மாறியது. அதே ஆண்டில் பங்கஜ் சத்தாவும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் ஸோமாட்டோ நிறுவனப் பங்கின் விலை 4.2 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, முன்னெப்போதும் இல்லாத அளவில் ஸோமாட்டோ பங்கின் விலை ரூ.232-ஐ தொட்டது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்கின் விலை ரூ.222-ஆக காணப்பட்டது.
ஸோமாட்டோ பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டதையடுத்து, அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.2 லட்சம் கோடியை எட்டியது. இதையடுத்து, இந்திய எலைட் பில்லியனர் கிளப்பில் தீபிந்தர் கோயலும் இடம்பிடித்துள்ளார்.
ஸோமாட்டோ நிறுவனத்தில் தீபிந்தர் கோயலுக்கு 36.95 கோடி பங்குகள் அல்லது 4.24 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.