EBM News Tamil
Leading News Portal in Tamil

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி அளவை குறைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் | Import of coal from foreign countries should be reduced


சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை ஆண்டுக்கு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கு மாறு அனைத்து மாநில மின் வாரியங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழக மின்வாரியத்துக்கு 5,120 மெகாவாட் திறனில் 6 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இதில் 800 மெகாவாட் வட சென்னை-3என்ற அனல்மின் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.

இதுதவிர, மற்ற அனல்மின் நிலையங்களில் தினமும் 85 சதவீத மின்னுற்பத்தி செய்ய 62 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. இது ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 2022-23-ம்ஆண்டில் நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எழுதிய கடிதத்தில் ஆண்டுக்கு 6 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழகம்உட்பட பல மாநில மின்வாரியங்களை அறிவுறுத்தியது.

தமிழக மின்வாரியமும் சந்தை விலைக்கு ஏற்ப மாறுபடும் விலை அடிப்படையில் 2022-23-ம்ஆண்டில் 15.80 லட்சம் டன், 2023-24-ம் ஆண்டில் 6.25 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2023-24-ம் ஆண்டில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 2.20 கோடி டன் நிலக்கரி கிடைத்தது. இது 2022-23-ம் ஆண்டில் 1.92 கோடி டன்னாக இருந்தது.

நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பால் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய அனுமதித்த அளவை ஆண்டுக்கு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்குமாறு அனைத்து மாநில மின்வாரியங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.