மத்திய அரசின் ஓய்வூதியர் நலத் துறையின் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பிரச்சாரம்: 5 நகரங்களில் இந்தியன் வங்கி மேற்கொள்கிறது | Digital Lifetime Certificate Campaign by Pensioners Welfare Department of Central Govt
சென்னை: மத்திய அரசின் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பிரச்சாரத்தை சென்னை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் 5 முக்கிய நகரங்களில் மேற்கொள்ளும் பொறுப்பு இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும்ஓய்வூதியதாரர்கள் நல்வாழ்வு துறை மூலம், நாடு முழுவதிலும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு முக சான்றளிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஓய்வூதியதாரர்கள் மத்தியில் புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். இம்மாதம் 1-ம் தேதி முதல் வரும்30-ம் தேதி வரை நடைபெறும் இப்பிரச்சார இயக்கத்தில் இந்தியன் வங்கியும் பங்கேற்றுள்ளது. சென்னை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் 5 முக்கிய நகரங்களில் இத்திட்டத்தின் செயல்பாட்டை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும் முக்கிய பொறுப்பு இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எளிதாக சமர்ப்பிக்கலாம்… அதனடிப்படையில், தற்போதுநடைபெற்றுவரும் இப்பிரச்சார இயக்கத்தின் ஒருபகுதியாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நல்வாழ்வு துறையின் சார்பு செயலாளர் ஆர்.கே.தத்தா, இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளைக்கு நேரில் சென்றார். அப்போது, ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களது சங்கங்களின் பிரதிநிதிகளோடு தத்தா கலந்துரையாடினார். முக சான்றளிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் அவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாழ்க்கை சான்றிதழை மிக எளிதாகவும், விரைவாகவும் சமர்ப்பிக்க இயலும் என அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் சசிகர் தயாள், மண்டல மேலாளர் அன்பு காமராஜ் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.