ஆசியப் பிராந்தியத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் முக்கியத்துவம் பெறும் இந்தியா, தாய்லாந்து | India Thailand are prominent in semiconductor manufacturing industry in Asia
புதுடெல்லி: செமிகண்டக்டர் துறையில் ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவும் தாய்லாந்தும் முக்கியத்துவம் பெற்று வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உலக நாடுகள் மின்னணு வாகனங்கள் நோக்கி நகர்ந்து வருகிற நிலையில், செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியா செமிகண்டக்டர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்புக்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகள் தங்களுக்கான விநியோக கட்டமைப்பைச் சீனாவில் கொண்டுள்ளன. கரோனாவுக்குப் பிறகு, உலக நாடுகள் தங்களுக்கான விநியோகக் கட்டமைப்பை சீனாவுக்கு மாற்றாக வேறு ஆசிய நாடுகளில் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்நாடுகளின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இந்தியா உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிஸ், இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலை தொடங்க ரூ.6,700 கோடி முதலீடு செய்வதாக சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவில் செமிகண்டக்டர் துறை வளர்ச்சி தொடர்பாக ‘செமிகான் இந்தியா 2023’ என்ற தலைப்பில் குஜராத் தலைநகர் காந்திநகரில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு செமி கண்டக்டர் துறையில் இந்தியா ஆரம்ப நிலையில் இருந்தது. இன்று அத்துறையில் அதிக முதலீட்டை ஈர்க்கும் நாடாக உருவாகி வருகிறது. செமிகண்டக்டர் விநியோகம் சார்ந்து நம்பகமான ஒரு துணையை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. உலக நாடுகள் இந்தியாவை நம்புகின்றன. ஏனென்றால், இந்தியா நிலையான, பொறுப்புமிக்க, சீர்த்திருங்கள் மேற்கொள்ளும் அரசைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தியாவின் உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது திறன்மிக்க பொறியாளர்கள், வடிவமைப்பாளர்களை இந்தியா கொண்டிருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் இந்தியாவை நம்புகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
செமிகண்டக்டர் துறையில் முதலீட்டைப் பெருக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் செமிகண்டக்டர் துறையில் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் தாய்லாந்தும் இறங்கியுள்ளது. செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தாய்லாந்து வரிச் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவும் தாய்லாந்தும் செமிகண்டக்டர் துறையில் கவனம் ஈர்க்கும் நாடுகளாக மாறியுள்ளன.