EBM News Tamil
Leading News Portal in Tamil

தடுமாறும் ஹார்லி டேவிட்சன்

இந்திய சந்தையில் பிரீமியம் ரக பைக்காக வலம் வரும் அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு தலைவர் இல்லாமல் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக இந்நிறுவனத்துக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் நிறுவனத்தின் விற்பனை இறங்குமுகமாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த விக்ரம் பாவா, ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு மாறினார். அப்போதிருந்து இன்று வரை நிறுவனத்துக்கு தலைவர் நியமிக்கப்படவேயில்லை. இவர் வெளியேறி 6 மாதங்கள் கழித்துதான் சீனாவில் உள்ள நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பீட்டர் மெக்கின்ஸியே இந்தியப் பிரிவையும் கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பை அளித்தது.
நிர்வாக இயக்குநர் மட்டுமின்றி பல முக்கிய பதவிகளும் உரிய தலைவர் இன்றி சிரமத்தை எதிர் கொண்டுள்ளது. இந்நிறுவத்தின் சந்தைப் பிரிவு தலைவராக இருந்த பல்லவி சிங் கடந்த ஆண்டு வெளியேறி எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இணைந்தார். அதேபோல விற்பனைப் பிரிவு மற்றும் விநியோகஸ்தர் மேம்பாட்டு பிரிவின் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆகியோரும் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களின் பதவியும் காலியாகவே உள்ளது.
சந்தைப் பிரிவு குறித்த தகவல்களை சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தின் பிற பொறுப்பாளர்களுடன் பேசி முடிவெடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் இந்நிறுவனத்தின் மனித வள பிரிவு மூலம் அணுகினாலும், அவர்கள் அளிக்கும் ஊதியம் உள்ளிட்ட விவரங்கள் போதுமானதாக இல்லை. மேலும் பொறுப்புகள் இல்லை என்பதால் நிறுவனத்தில் உயர் பதவிக்கு வருவதற்கு பலரும் தயங்குகின்றனர் என்று இத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனாலேயே இந்திய சந்தை இந்நிறுவனத்துக்கு பிரதானமாக படவில்லை என்பதால் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
2017-18-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை 7 சதவீதம் சரிந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விற்பனை 3,413 ஆக இருந்தது. முந்தைய ஆண்டில் 2016-17-ல் விற்பனை 21 சதவீதம் சரிந்து 3,690 வாகனங்கள் மட்டுமே விற்பனையாயின. ஹார்லி டேவிட்சனுக்குப் போட்டியாக இந்திய சந்தையில் களமிறங்கிய பிரிட்டனின் டிரையம்ப் நிறுவன மோட்டார் சைக்கிள்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது. கடந்த ஆண்டு 6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது இந்நிறுவனம். மொத்தம் 1,247 வாகனங்களை டிரையம்ப் விற்றுள்ளது. டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே தனது தயாரிப்புகளை அசெம்பிள் செய்து விற்கும் உத்தியை பின்பற்றுகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு ஹரியாணா மாநிலத்தில் பாவல் எனுமிடத்தில் அசெம்பிளி ஆலை உள்ளது. இங்கு முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இது தவிர முழுவதுமாக அசெம்பிள் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்யும் பணியும் நடைபெறுகிறது.
இருப்பினும் இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனாலும் இந்த மோட்டார் சைக்கிளின் விலை அதிகமாக உள்ளது. ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்திய சந்தையில் வரவேற்பிருந்தாலும் உரிய வழிகாட்டும் தலைவர் இல்லையெனில் அந்நிறுவனமும் சரிவைத்தான் சந்திக்கும் என்பதற்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நிறுவனம் சந்தித்து வரும் சரிவே காரணமாகும்.