EBM News Tamil
Leading News Portal in Tamil

புதிய தொழில்நுட்பங்களுடன் ஆல்கார்கோ நிறுவனம்

ஏற்றுமதி, இறக்குமதி சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஆல்கார்கோ புதிய தொழில்நுட்பங்களுடன் சேவையை மேம்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் பிராந்திய தலைவரான கேப்டன் அவிநாஷ் ஐயர் கூறியதாவது,
ஏற்றுமதி இறக்குமதி சரக்குகளை கையாளுவதில் தென்னிந்திய அளவில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக ஆல்கார்கோ வளர்ந்துள்ளது. உலக அளவில் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி சரக்குகளை அனுப்புவதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டுள்ளோம். ஏற்றுமதி சரக்குகளை கையாளுவதற்கான அனைத்து தீர்வுகளையும் நிறுவனம் அளிக்கிறது. வாடிக்கையாளர் இடத்திலிருந்து சரக்குகளை கையாளுவது முதல், சுங்க நடைமுறை, துறைமுக நடைமுறைகளுடன் குறிப்பிட்ட இடத்தில் சரக்குகளை கொண்டு சேர்ப்பது வரையில் அனைத்து பணிகளிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கேற்ப அனைத்து வகையிலான இயந்திரங்களையும் நிறுவனம் வைத்துள்ளது.
இ-காமர்ஸ் லாஜிஸ்டிக்ஸ், ஒப்பந்த அடிப்படையிலான சரக்கு போக்குவரத்து என பல துறைகளிலும் கவனம் செலுத்துகிறோம். சரக்குகளை கையாளுவதின் அனைத்து மட்டத்திலும் கணினி மயமான கண்காணிப்பு, சரக்குகளின் வருகை, ஏற்றுமதி விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் அளிக்கிறோம்.
பகுதியளவிலான சரக்கு பெட்டக (கண்டெய்னர்) சேவையில் நிறுவனம் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. சரக்குகளை வாடிக்கையாளர்களே நேரடியாக துறைமுகங்களில் கையாளுவதற்கான அனுமதிகள் இருந்தாலும், சரக்குகளை பாதுகாப்பது மற்றும் கிடங்கு சேவைகளை அளிப்பதால் இந்த துறையின் வளர்ச்சியில் பாதிப்பு இருக்காது. ஏற்றுமதி தொழில்களுக்கான வளர்ச்சியை பொறுத்து சரக்கு பெட்டக கையாளுதல், லாஜிஸ்டிக்ஸ் துறையின் வளர்ச்சி இருக்கும், இந்த துறையில் மிகப் பெரிய மாற்றங்களை ஜிஎஸ்டி சட்டம் உருவாக்கியுள்ளது என்று அவிநாஷ் கூறினார்.