‘ஆடி’ கார் தலைமை நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் கைது
ஆடி கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் டீசல் புகை வெளியேற்ற விவகாரத்தில் சாட்சிகளை அமுக்கி விடுவார் என்ற ஐயத்தின் காரணமாக கைது செய்யப்பட்டதாக ஜெர்மனி சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதாரங்களை அழித்து விடுவார் என்ற காரணத்தினால் ருபர்ட் ஸ்டாட்லரைக் கைது செய்ய நீதிபதி உத்தவிட்டதாக இவர்கள் தெரிவித்தனர்,
வோல்க்ஸ் வேகன் ஆடம்பரக் கார் பிராண்ட் ஆடி கார் டீசல் வெளியேற்றத்தில் பொய் கூறி ஏமாற்றியதன் மீதான வழக்கில் கடந்த வாரம் சட்டவல்லுநர்கள் தங்கள் விசாரணைப் பரப்பை அதிகரித்தனர்.
இதனையடுத்து பொய்விளம்பரம், மோசடி என்று ஸ்டாட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இந்த விவகாரம் எழுந்தது, அதாவது டீசல் புகை வெளியேற்ற விவரங்களை மறைப்பதற்காக தங்கள் கார்களில் கருவிகளைப் பொருத்தியதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முதன் முதலில் இந்த ஏமாற்றுக்கருவிகள் வோல்க்ஸ் வேகன் கார்களில் பொறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆடம்பர வாகனமான ஆடிகாரிலும் இந்த டீசல் புகை வெளியேற்ற தரவு மறைப்புக் கருவி பொருத்தப்பட்டது பிற்பாடு சோதனைகளில் தெரியவந்தது.
அமெரிக்காவில் விற்கப்பட்ட சுமார் 6 லட்சம் வோல்க்ஸ்வேகன் கார்களில் டீசல் புகை வெளியேற்ற மறைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டதாக வோல்க்ஸ்வேகன் ஒப்புக் கொண்டது. இந்த சாஃப்ட்வேர் உலகம் முழுதும் 11 மில்லியன் கார்களில் பொருத்தப்பட்டதாகவும் தெரிகிறது.