கொரோனா நாடகமாடி தப்பி ஓடிய கைதி…! நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கூறி, தப்பி ஓடிய கைதியை பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் போலீசார் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் மீது திருவைகுண்டம் நாசரேத் ஆழ்வார்திருநகரி காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி சித்திரை தெருவைச் சேர்ந்த நாகராஜன் வீடில் நேற்று பட்டபகலில் திருட முயன்ற போது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவைகுண்டம் நீதிமன்ற உத்தரவுப்படி இரவில் மாயாண்டியை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். வரும் வழியிவ் மாயாண்டி பலமாக இருமியுள்ளானர். அதோடு போலீசாரிடம் தனக்கு காய்ச்சல் வருவது போல் உள்ளது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூாரி மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர். கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு தொற்று இருக்கிறதா என்ற சோதனை மேற்கொள்ளப்ட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பாத்ரூம் போவதாக கூறிவிட்டு சென்ற அவர் வார்டுக்கு திரும்பவில்லை. சுவர் ஏறிக்குதித்து தப்பியோடியது தெரியவந்தது. இதனையடுத்து தீவீரமாக மாயாண்டியை போலீசார் தேட தொடங்கினர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்ற நிலையில் அங்கு சென்று போலீசார் தேடினர்.
போலீசார் வருவதை அறிந்த மாயாண்டி அங்கிருந்து தப்பி வேய்ந்தான்குளத்தில் குதித்து தப்பி ஓடி விட்டார். குளம் முழுவதிலும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் படகில் தேடியும் விசாரணை கைதி கிடைக்கவில்லை.
பல மணி நேர தேடுதலுக்குப் பின்னர், கைதி மாயாண்டி கருங்குளம் பகுதியில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டான். கொரோனா நோயாளி போல் நடித்து மருத்துவமனையில் கைதி தப்பிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது