கொரோனா பாதிப்புக்காக அதிக நிவாரண நிதி கொடுத்தது ரஜினியா…? விஜயா…? வாக்குவாதத்தில் நெருங்கிய நண்பனையே கொலை செய்த இளைஞர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கொரோனாவுக்கு அதிக நிவாரனம் கொடுத்தது ரஜினியா? விஜயா என ஏற்பட்ட சண்டையில் நண்பனை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், சந்திக்காப்பான் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் (22). கூலித் தொழிலாளியான இவர் விஜய் ரசிகர். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஆறுமுகம், சமையல் வேலை செய்து வருகிறார், இவரது மகன் திணேஷ்பாபு (22). இவர் ரஜினி ரசிகர்.
யுவராஜ், திணேஷ்பாபு இருவரும் நெருங்கிய நண்பர்களாவார்கள். ஊரடங்களால் இருவரும் வீட்டியே இருந்துவரும் நிலையில். நேற்று மாலை திணேஷ்பாபு வீட்டில் நண்பர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் மது போதை அதிகமான நிலையில் கொரோனா நிவாரணமாக ரஜினி அதிக நிதி கொடுத்தாரா, விஜய் அதிகமாக நிதி கொடுத்தாரா? என விவாதம் எழுந்துள்ளது. விளையாட்டாக தொடங்கிய விவாதம் ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு சென்றது.
கைகலப்பு முற்றிய நிலையில், போதையில் திணேஷ்பாபு, யுவராஜை கீழே பிடித்து வேகமாக தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தவறிந்த யுவராஜின் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மரக்காணம் காவல்துறையினர் யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மரக்காணம் காவல்துறையினர் தினேஷ்பாபுவை கைது செய்தனர். ரசிகச்சண்டையால் நண்பனையே கொலை செய்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.