காலில் செருப்பு கூட இல்லாமல் 170 கி.மீ நடை… 7 வயது சிறுவன் உள்பட 10 பேரை மீட்ட போலீஸ்…!
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு காலில் செருப்பு கூட இல்லாமல் 170 கிலோ மீட்டர் நடந்தே சென்ற 7 வயது சிறுவன் உள்ளிட்ட 10 பேரை சேலம் போலீசார் மீட்டு லாரியில் அனுப்பி வைத்தனர்.
நாடு முழுவதும் கொரானா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கோவையில் கட்டுமான பணிக்கு சென்றனர். ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாத சூழ்நிலையில் இருந்ததால் வேறு வழியின்றி தங்கள் கையிலிருந்த பணத்தைக்கொண்டு காலத்தை கழித்தனர்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர். இதனை அடுத்து 7 வயது சிறுவன் சபரிநாதனுடன் 10 பேர் 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து கால்நடையாக 250 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டனர்.
வியாழக்கிழமை மாலை கொண்டலாம்பட்டி நெடுஞ்சாலையில் மிகவும் களைப்புடன் வந்த அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த தாங்கள் பசி பட்டினியோடு கோவையில் தங்க முடியாத சூழ்நிலையில், கால்நடையாக கள்ளக்குறிச்சிக்கு செல்வதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு குடிநீர் வழங்கி அவர்களை அமர வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான உணவினை வழங்கியதோடு, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினர்.
தொடர்ந்து அந்த வழியாக சென்னை நோக்கி அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி, சிறுவன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரை அந்த லாரி மூலம் கள்ளக்குறிச்சிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.170 கிலோ மீட்டர் காலில் செருப்பில்லாமல் 7 வயது சிறுவன் நடந்தே வந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.