வெனிசுலா அதிபர் உயிர் தப்பினார்; ஆளில்லா குட்டிவிமானம் மூலம் கொல்ல முயற்சி: வீரர்கள் 7 பேர் படுகாயம்
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை ஆள் இல்லாத விமானத்தில் வெடிகுண்டு நிரப்பிக் கொல்ல நடந்த சதியில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடு வெனிசுலா. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்தபின் அதிபராக நிகோலஸ் மதுரோ அதிபராகப் பதவி ஏற்றார்.
சமீபத்தில் நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபராகப் பதவி ஏற்றுள்ளார். வெனிசுலா நாட்டில் கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. மருந்து, உணவுப்பற்றாக்குறையால், ஏராளமான மக்கள் நாட்டைவிட்டு பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
மேலும், அண்டை நாடுகளான கொலம்பியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடனும் கம்யூனிஸ்ட் நாடான வெனிசுலாவுக்கு நட்புறவு இல்லை. இதனால், ஒதுக்கப்பட்ட நாடாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், கார்காஸ் நகரில் ராணுவம், தேசியப்படைகளின் 81-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அப்போது, ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு படையினரின் அணிவகுப்பு நடந்தது. அதன்பின், அதிபர் நிகோலஸ் மதுரோ நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் நேரலையில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென வானில் இருந்து சிறிய ரக ஆள் இல்லா குட்டிவிமானம் பறந்து வந்தது. அப்போது பேசிக்கொண்டிருந்த அதிபர் மதுரோ, அந்த விமானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த விமானம் திடீரென வெடித்துச் சிதறியது.
இதைக் கண்ட அதிபர் மதுரோ அதிர்ச்சியில் உறைந்தார், விமானம் வெடித்துச் சிதறுவதைப் பார்த்ததும் அதிபரின் தனிப்பாதுகாப்பு படையினர் அவரைச் சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரைப் பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். இந்த டிரோன் குண்டுவெடிப்பில் 7 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பான வீடியோவையும் வெனிசுலா அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அதிபர் நிகோலஸ் மதுரோ ஊடகங்களிடம் பேசுகையில், “ என்னைக் கொல்வதற்கு ஆள் இல்லா விமானம் மூலம் சதி நடந்துள்ளது. என் கண் முன்னே ஒரு பொருள் பறந்து வந்துவெடித்துச் சிதறியது. இதில் 7 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு கொலம்பியா நாடும், அமெரிக்காவின் சதியும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் எனக் குற்றம்சாட்டினார்.
ஆனால், வெனிசுலா அதிபரின் குற்றச்சாட்டை கொலம்பியா அரசு மறுத்துவிட்டது. அதிபர் மதுரோவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கொலம்பியா வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஆனால் அமெரிக்க அரசிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து வெனிசுலா நாட்டின் தகவல்துறை அமைச்சர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் கூறுகையில், “அதிபர் நிகோலஸ் மதுரோ மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். ஆள் இல்லா விமானத்தில் வெடிபொருட்களை வைத்து அவரைக் குறிவைத்து வெடிக்கவைக்கச் சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இந்தச்சதியில் இருந்து அவர் எந்தவிதமான காயமின்றி தப்பியுள்ளார். இதற்கு வலதுசாரி இயக்கங்களே காரணமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.