EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆகாயத் தாமரையை உரமாக மாற்றும் திட்டத்தை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பித்த மாணவி சன்னிதாவுக்கு பாராட்டு! | Student Sannita presented scheme to convert lotus flowers into fertilizer at the Geneva conference


திருநெல்வேலி: ‘மாற்றத்தை உருவாக்குபவர்கள் 2025’ என்ற தலைப்பில் உலக கோப்பைக்கான போட்டிகள் 9 கட்டங்களாக நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவிகள் சன்னிதா, ஷலாகா ஆகியோர் நீர் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்துடன் ‘ப்ராஜக்ட் ப்ளூ’ என்ற தலைப்பில் புதிய திட்டத்தை சமர்ப்பித்து விளக்கினர்.

இந்த திட்டப்படி தண்ணீரை மாசுபடுத்தும் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதை தடுக்கும் நீர் ஆக்கிரமிப்பு கொடி தாவரமான ஆகாயத் தாமரையை நீரில் இருந்து அகற்றி, அதை தரமான இயற்கை பவுடர் உரமாக தயாரித்து, தாவர வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் விதத்தை விளக்கி அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த திட்டம் ஒவ்வொரு கட்டப் போட்டியிலும் ஏற்கப்பட்டது. டாப் 200 பிரிவில் இடம் பெற்ற இந்த மாணவிகளின் திட்ட அறிக்கையை, இறுதியாக இந்தியாவில் இருந்து ஐ.நா. சபையில் நேரடியாக சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், மாணவி ஷலாகாவுக்கு விசா கிடைக்க தாமதமான நிலையில், மாணவி சன்னிதா மட்டும் கடந்த வாரம் தனது தந்தையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமான ஜெனிவாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்று, இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பித்து விளக்கினார்.

ஐ.நா. அலுவலக பொதுச் செயலாளர் டேட்டியானா வலோவயா மற்றும் குழுவினர் இதை ஆய்வு செய்து, பாராட்டினர். மேலும், பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். இதையடுத்து, நாடு திரும்பிய மாணவி சன்னிதாவை பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.